தேச ஐக்கியத்தைக் குலைக்கும் இனவாத அரசியலைப் புறக்கணிப்போம்! தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி

கடந்த சில நாட்களாக இடம்பெற்று வரும் முஸ்லீம் மக்களுக்கு எதிரான இனக் கலவரங்கள் கவலையைத் தருகின்றன என தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் பொன். சிவசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

இன்றைய(10) தினம் விடுத்துள்ள இவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கடந்த ஆட்சிக் காலத்தில் மிகவும் அப்பட்டமாக செயற்பட்ட சக்திகள் சில காலம் மௌனமாக இருந்தன. நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகள் மீண்டும் இனவாத சக்திகளுக்கு உற்சாகத்தை வழங்கியுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.

இனவாத அரசியல் நாட்டில் பல்லாயிரம் மக்களின் உயிர்களைப் பறிப்பதற்குக் காரணமாக இருந்துள்ளது. இன சௌஜன்யத்தைக் குலைத்துள்ளது.

கடந்த 2015ம் ஆண்டின் பின்னர் தேசிய இனங்களிடையே காணப்பட்ட நல்லெண்ணம் மிகவும் பலவீன நிலையில் உள்ளதையும், இவ்வாய்ப்பை இனவாத சக்திகள் பயன்படுத்தி நாட்டை மீண்டும் பாழ் நிலைக்குத் தள்ள இவர்கள் முயற்சிப்பதாகவே கருத வேண்டியுள்ளது.

சுதந்திரத்திற்குப் பின்னர் ஏற்பட்ட இவ் இனக் கலவரங்கள் தேசிய முன்னேற்றத்திற்கும், நல்லெண்ணத்திற்கும் பெரும் தடையாகவே உள்ளன. இதன் காரணமாகவே எமது நாடு பொருளாதார அடிப்படையில் பின்தங்கி உள்ளது.

தற்போது குறிப்பாக வர்த்தக நிலையங்கள் திட்டமிடப்பட்ட வகையில் தாக்கப்பட்டு அம் மக்களைப் பொருளாதார ரீதியாகப் பலவீனப்படுத்தும் சதியாகவே இச்செயல்கள் உள்ளது என்பது தெளிவாக உள்ளது.

இந்நிலையில் இலங்கையின் தேசிய சிறுபான்மை இனங்கள் அரசியல் கோட்பாடுகளில் கருத்து வேற்றுமை இருப்பினும் பாதுகாப்பு அம்சங்களில் ஒருங்கிணைந்து செயற்படுவது அவசியம் என தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி கருதுகிறது.

குறிப்பாக தமிழ், முஸ்லீம் சமூகங்கள் தங்களுக்கு இடையேயான முரண்பாடுகளை சுமூகமாகத் தீர்த்து, இணைந்து செயற்பட வேண்டிய அவசரமும் அவசிமும் தற்போது ஏற்பட்டு உள்ளது.

எனவே இனவாதத்திற்கு எதிராக சகல கட்சிகளும் ஒருமித்துச் செயற்பட வேண்டுமென அறைகூவல் விடுக்கின்றோம்.

அதேவேளை இச்சம்பவங்கள் தொடர்பாக அரசின் பாதுகாப்புத்துறை ஏற்ற வகையில் செயற்படவில்லை என்பதால் முதலில் நாட்டின் சட்டம் ஒழுங்கிற்கு முக்கியத்துவம் வழங்கி குற்றம் புரிந்தவர்களை நீதியின் முன் நிறுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் ஆவன செய்ய வேண்டுமென அரசினை வேண்டுகிறோம்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like