இராணுவ பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை தொழுகை – பௌத்த பிக்குகளும் பங்கேற்பு

சிறிலங்கா இராணுவத்தினர், காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் முஸ்லிம்கள் நேற்று பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை தொழுகைகளில் ஈடுபட்டனர்.

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளால், குறைந்தது மூவர் உயிரிழந்தனர். அத்துடன் பள்ளிவாசல்கள் உள்ளிட்ட முஸ்லிம்களின் பெருமளவு வீடுகள், வாணிப நிலையங்கள், தீவைத்து எரிக்கப்பட்டன. தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன.

இந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகைகளுக்கு பள்ளிவாசல்களுக்குச் செல்வதற்கு முஸ்லிம்கள் அச்சம் கொண்டிருந்தனர்.

இதனால், கண்டியிலும் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்கள் அனைத்துக்கும், சிறிலங்கா இராணுவம் மற்றும் காவல்துறையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், நேற்று மதியம் முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை தொழுகைகளில் ஈடுபட்டனர்.

கண்டியில் வன்முறைகளால் சேதப்படுத்தப்பட்ட பள்ளிவாசல்களுக்குள் தொழுகை நடத்த முடியாததால், திறந்த வெளியில் தொழுகைகள் நடத்தப்பட்டன.

வெள்ளிக்கிழமை தொழுகையின் போது, எந்தச் சம்பவங்களும் இடம்பெறவில்லை என்று சிறிலங்கா காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

அதேவேளை, வன்முறைகள் இடம்பெற்ற கண்டி மாவட்டத்தில் உள்ள சில பள்ளிவாசல்களில், வெள்ளிக்கிழமை தொழுகைகள் இடம்பெற்ற போது, பாதுகாப்புக்காகவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும், பௌத்த பிக்குகளும் அதில் கலந்து கொண்டிருந்தனர்.