இன்று இந்தியா புறப்படுகிறார் சிறிலங்கா அதிபர் – அங்கிருந்து ஜப்பானுக்குப் பயணம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இந்தியா, மற்றும் ஜப்பானுக்கான அதிகாரபூர்வ பயணங்களை இன்று ஆரம்பிக்கவுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மக்ரோன் ஆகியோரின் அழைப்பை ஏற்று, அனைத்துலக சூரிய கூட்டமைப்பின் முதலாவது மாநாட்டில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இன்று புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இன்றும் நாளையும், அவர் புதுடெல்லியில் அரசுமுறைப் பயணமாக தங்கியிருப்பார்.

இந்தப் பயணத்தின் போது, இந்திய அரசியல் தலைவர்களை சிறிலங்கா அதிபர் சந்தித்துப் பேச்சு நடத்தக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதையடுத்து, ஜப்பானுக்கான அதிகாரபூர்வ பயணத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆரம்பிக்கவுள்ளார்.

ஜப்பானிய பிரதமர் சின்ஷோ அபேயின் அழைப்பின் பேரில், எதிர்வரும் 12ஆம் நாள் தொடக்கம், 17ஆம் நாள் வரை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, ஜப்பானுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

வரும் 13ஆம் நாள் ஜப்பானிய சக்கரவர்ததி அகிஹிடோவையும், 14ஆம் நாள், ஜப்பானிய பிரதமர் சின்ஷோ அபேயையும் அவர் சந்தித்துப் பேச்சு நடத்துவார்.

இந்தச் சந்திப்பின் பின்னர் சிறிலங்கா அதிபருக்கு இராப்போசன விருந்தும் அளிக்கப்படவுள்ளது.