கண்டியில் ஊரடங்கு நேரத்தில் நேற்றிரவும் வன்முறைகள் – தடுக்க முடியாமல் திணறும் படைகள்

கண்டி மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், நேற்றிரவும் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அக்குறணை, வெலேகட, அம்பத்தென்ன பகுதிகளில் நேற்றிரவும், பள்ளிவாசல்கள், வாணிப நிலையங்கள், வீடுகளின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

சில இடங்களில் முஸ்லிம்களின் வாணிபங்களைக் குறிவைத்து தீவைப்பு சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்ட அக்குறணை முதலாம் கட்டை, 9ஆம் கட்டை பள்ளிவாசல்களுக்கு நேற்றிரவும் இன்று அதிகாலையிலும், அமைச்சர் ரவூப் ஹக்கீம் சென்று, நிலைமைகளைப் பார்வையிட்டுள்ளார்.

அத்துடன், அந்தப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டுள்ளார்.

அக்குறணைப் பகுதியில், சிறிலங்கா இராணுவத்தினரின் பவல் கவசவாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்கள் வாழுகின்ற பகுதிகளில் பெருமளவில் படையினர் குவிக்கப்பட்டுள்ள போதிலும், வன்முறைகளை முற்றிலும் கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்ற நிலை காணப்படுவதாக பிந்திக் கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.