வடக்கு மாகாணத்தில் சுகாதாரத் தொண்டர்களாக சேவையாற்றுவோரை ஒரு லட்சம் இளையோருக்கு அரச தொழில் வழங்கும் திட்டத்துக்கு உள்ளீர்த்து நிரந்தர நியமனம் வழங்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பணித்துள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர், கலாநிதி பீ.பி.ஜயசுந்தரவுக்கு இந்த பணிப்பை ஜனாதிபதி வழங்கினார்.
இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களின் கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இதனைத் தெரித்துள்ளார்.
வடக்கு வைத்தியசாலைகளில் சுகாதாரத் தொண்டர்களாக பணியாற்றியவர்களுக்கு மாகாண சுகாதார அமைச்சினால் நிரந்தர நியமனம் வழங்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போது, ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக நியமனம் இடைநிறுத்தப்பட்டது.
அதில் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு நியமனக் கடிதங்கள் கிடைத்திருந்த நிலையில் 2019 ஜனாதிபதித் தேர்தலின் பின்னான ஆட்சி மாற்றத்தையடுத்து நிதி அமைச்சின் செயலாளரின் பணிப்பில் அனைத்து புதிய நியமனங்களும் இடைநிறுத்தப்பட்டன.
இந்த நிலையில் தமக்கான நிரந்தர நியமனத்தை இடைநிறுத்தி அநீதி இழைக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட சுகாதாரத் தொண்டர்கள் தெரிவித்ததுடன், வடமாகாண ஆளுநரின் செயலகம் முன்பாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையிலேயே இன்றைய மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர்களுடனான கலந்துரையாடலில் கருத்துரைத்த யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அங்கஜன் இராமநாமன்,
“வடமாகாண சுகாத் தொண்டர்களுக்கு நி்ரந்தர நியமனம் வழங்கப்படும் எனத் தெரிவித்துவிட்டு, பின்னர் அதனை செய்யாது தொடர்ச்சியாக ஏமாற்றப்படுகிறார். அவர்களுக்கான நிரந்தர நியமனக் கடிதம் கடந்த அரசினால் தேர்தல் காலத்தில் வழங்கப்பட்டிருந்தாலும் அவர்கள் வருமானம் குறைந்தவர்கள்.
பலர் போர்க்காலத்தில் பணியாற்றியவர்கள்.
அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அமைச்சர் மகிந்தானந்த அளுத்கம, அமைச்சரவைக்குக் கொண்டு செல்ஙதாக உறுதியளித்திருந்தார். அது இன்னும் நடக்கவில்லை’ என்று தெரிவித்தார்.
சுகாதாரத் தொண்டர்களாக சேவையாற்றுவோரை ஒரு லட்சம் இளையோருக்கு அரச தொழில் வழங்கும் திட்டத்துக்கு உள்ளீர்த்து நிரந்தர நியமனம் வழங்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, ஜனாதிபதியின் செயலாளருக்கு பணித்தார்.






