தோசையை பிரசாதமாக தரும் கோவில் பற்றி உங்களுக்கு தெரியுமா?

கோவில் பிரசாதம் என்றால் நம் நினைவுக்கு வருவது லட்டு, புளியோதரை, பஞ்சாமிர்தம் தான்.

ஆனால் தோசையை பிரசாதமாக தரும் கோவில் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? ஆம் சிங்கப்பெருமாள் நரசிம்மர் கோவிலில் சுவையான மிளகு தோசையை பிரசாதமாக தருகின்றனர்.

சென்னை – திருச்சி சாலையில் செங்கல்பட்டிற்கு முன் அமைந்துள்ள இந்த ஊர் நரசிம்மரின் முகமான சிங்கத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது.

2000 ஆண்டுகள் பழமையான பல்லவர் காலத்தைச் சேர்ந்த குடைவரைக் கோவிலாகும், இங்கு பாடலாத்ரி நரசிம்மர் மூலவராக வீற்றிருக்கிறார்.

இதில் கிழக்குமுகமாக அமையபெற்ற ஒரு தள கோபுரம் ஒரு பாறையின் மீது அமைக்கப்பட்டுள்ளது, சுவாமி குகைக்குள் வீற்றிருப்பதால் கோவிலை வலம் வருபவர்கள் சுமார் நூறு படிக்கட்டுகள் கொண்ட சிறு குன்றினையும் சேர்த்து தான் வலம் வரவேண்டும், ஆகையால் இக்கோவிலுக்கே உரித்தான த்ரிநேத்ர தரிசனம், கிரிவலம் இக்கோவிலின் சிறப்பாகும்.

கடன் தொல்லை நீங்க, வழக்குகளில் வெற்றி கிடைக்க, செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் திருமணத்தடை விலக இங்கு சிறப்புபூஜை செய்யப்படுகிறது.

திருவாதிரை, சுவாதி நட்சத்திரத்தினரும், இராகு திசை நடப்பவர்களும், சனிதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களும் இங்கு வழிபாடு செய்தால் நன்மை ஏற்படும் என்பது நம்பிக்கை.

கோயிலின் பின்புறமுள்ள அழிஞ்சல் மரம் மிகவும் சக்தி வாய்ந்தது. திருமண வரம், குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க நினைப்பவர்கள் இம்மரத்தில் சந்தனம், குங்குமம் பூசி நெய் விளக்கேற்றி வழிபடுகின்றனர்.  

இங்கு லட்டு, அதிரசம், முறுக்கு, சீடை, தட்டை போன்றவை இருந்தாலும் மிளகு தோசைக்கே வரவேற்பு அதிகம். இந்த தோசைகள் பித்தளைப் பானைகளில் வைக்கப்பட்டிருக்கும்.

அதில் எண்ணெய் பொடி சேர்த்து கொடுக்கின்றனர். இதை குழந்தைகள் விரும்பி உண்பதால்தோசைப் பெருமாள் கோவில் என்று செல்லமாக குறிப்பிடுகின்றனர்.

பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்கு பிரதோஷத்தன்று திருமஞ்சனம் செய்தும், புது வஸ்திரம் சாத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.