தேங்காய் எண்ணெய் நிறுவனமொன்றுக்கு அதிரடி உத்தரவு

புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ‘எப்லடொக்சின்’ எனும் பதார்த்தம் அடங்கிய தேங்காய் எண்ணெய்யை உற்பத்தி செய்யும் உள்நாட்டு தேங்காய் எண்ணெய் நிறுவனமொன்றுக்கு தனது உற்பத்திகளை சந்தையிலிருந்து அகற்றுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்தல் விடுத்துள்ளது.

குறித்த நிறுவனத்தின் தேங்காய் எண்ணெய்யிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் முடிவில் ‘எப்லடொக்சின்’ எனும் பதார்த்தம் அடங்கியுள்ளமை கண்டறிப்பட்டதை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நுகர்வேர் விவகார அதிகார சபை தெரிவிக்கிறது.

சந்தையில் காணப்படும் தேங்காய் எண்ணெய்களில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ‘எப்லடொக்சின்’ எனும் பதார்த்தம் அடங்கியுள்ளதா என்பதை கண்டறியும் பரிசோதனைத் திட்டமொன்று நுகர்வோர் விவகார அதிகார சபையால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வெவ்வேறு பெயர்களில் சந்தையில் காணப்படும் ஒவ்வொரு நிறுனங்களினதும் தேங்காய் எண்ணெய் பரிசோதிக்கப்பட்டது. இதில், குறித்த ஒரு நிறுவனத்தின் தேங்காய் எண்ணெய்யில் மாத்திரம் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ‘எப்லடொக்சின்’ எனும் பதார்த்தம் அடங்கியுள்ளமை கண்டறிப்பட்டது.

அதன் பின்னர் மேலதிக பரிசோதனைகளுக்காக குறித்த நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையிலுள்ள தேங்காய் எண்ணெய்யும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அதிலும் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ‘எப்லடொக்சின்’ பதார்த்தம் அடங்குகின்றமை உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, குறித்த நிறுவனத்துக்கு அதன் தேங்காய் எண்ணெய்களை சந்தையிலிருந்து அகற்றுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.