ரஞ்ஜன் ராமநாயக்க சிறைக்குள் தற்கொலைக்கு முயற்சி? தென்னிலங்கையில் பரபரப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க சிறைச்சாலைக்குள் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்திருப்பதாக வெளியான தகவலினால் தென்னிலங்கையில் பெரும் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும் அவ்வாறான எந்த முயற்சியையும் ரஞ்ஜன் ராமநாயக்க செய்யவில்லை என்று சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 4 வருட கடூழிய சிறைத்தண்டனை பெற்று கடந்த 4 மாதங்களாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க அம்பாந்தோட்டை அங்குனகொல பெலஸ்ஸ சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க கடும் மன அழுத்தம் ஏற்பட்டதால் சிறைச்சாலைக்குள்ளேயே தற்கொலை செய்துகொள்ள முயற்சித்திருப்பதாக இன்றைய தினம் தென்னிலங்கை ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன

. குறிப்பாக கடுமையான மன உளைச்சலுக்கு ரஞ்ஜன் ராமநாயக்க தள்ளப்பட்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் அவ்வாறான எந்த முயற்சியையும் ரஞ்ஜன் ராமநாயக்க மேற்கொள்ளவில்லை என்று சிறைச்சாலைகள் தலைமையகத்தின் பேச்சாளரான சந்தன ஏக்கநாயக்க இன்றைய தினம் மாலை ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

அதேபோல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிங்கள நடிகருமான ரஞ்ஜன் ராமநாயக்க அவ்வாறான எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும், தற்கொலைக்கு முயற்சி செய்ததாக வெளியாகிய செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை எனவும் அவரது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.