இன்று அட்சய திருதியை… இந்த நாளில் தங்கத்திற்கு பதிலா கல் உப்பு வாங்குங்கள்…செல்வம் வீடு தேடி வரும் !

அட்சய என்றால் வளர்க என்று பொருள். அட்சய திருதியை நாளில் செய்யும் செயல் மேன்மேலும் வளரும் என்பது நம்பிக்கை.

வெள்ளிக்கிழமை மே 14ஆம் தேதி அட்சயதிருதியை நாள் கொண்டாடப்படுகிறது.

அட்சய திருதியை நாளில் நாம் வாங்கும் பொருட்கள் மேன்மேலும் வளரும். அன்றைய தினம் கல் உப்பு, மஞ்சள் வாங்கினாலும் தங்கம் வாங்குவதற்குரிய பலன்கள் கிடைக்கும்.

நம்முடைய வீட்டில் செல்வம் பெருகும். சுக்கிரன் ஆசி நிறைந்த வெள்ளிக்கிழமை அட்சய திருதியை வருவது சிறப்பானதாகும்.

சித்திரை மாத அமாவாசைக்கு பிறகு 3வது நாள் திருதியை 3ஆம் எண்ணுக்கு அதிபதி குரு, இந்த குரு உலோகத்தில் தங்கத்தை பிரதிபலிக்கிறார்.

எனவே குருவுக்கு பொன்னன் என்ற பெயரும் உண்டு. இதனால் தான் அட்சய திருதியை நாளில் பொன் வாங்குவது சிறப்பு பெறுகிறது.

அட்சய திருதியை தினத்தன்று தான் பிரம்மா, உலகை படைத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.

அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் பவிஷ்யோத்தர புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

அட்சய திருதியை தினத்தன்று தான் கிருதயுகம் பிறந்தது. அட்சய திருதியை தினத்தன்று தான் கங்கை அன்னை வான் உலகத்தில் இருந்து பூமியை வந்தடைந்தார் என புராணங்கள் கூறுகின்றன.

அட்சய திருதியை நாள்

அட்சய திருதியைக்கு இன்னொரு காரணமும் சொல்வர். அதாவது அடிபடாத இரண்டாக உடையாத முழு அரிசிக்கு `அட்சதை’ என்று பெயர். சதம் என்றால் அடிப்பட்டு ஊனமாகாதது என்றும் அர்த்தம் உண்டு. அட்சதையால் அட்சயனை மதுசூதனை வணங்குவதால் அந்த திதிக்கு `அட்சய திருதியை’ எனும் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது புராணம்.

உணவுக்கடவுள்

அட்சய திருதியை நன்னாளில் தான் உணவு கடவுளான அன்னபூரணி அவதரித்தார். சிவபெருமான் அன்னபூரணியிடம் பிட்சாடனராக வந்து யாசகம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான். பராசக்தியின் ஒரு அம்சமான சாகம்பரிதேவி இந்த உலகில் காய்கறிகளையும், மூலிகைச் செடிகளையும் உருவாக்கியவர் என்று புராணம் சொல்கிறது. அட்சய திருதியை தினத்தன்றுதான் அவர் காய்கறி, மூலிகைகளை உருவாக்கினார்.

லட்சுமி அவதாரம்

அட்சய திருதியை தினத்தன்று தான் ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி அவதாரங்கள் நிகழ்ந்தன. அட்சய திருதியை தினத்தன்றுதான் குபேரன் நிதி கலசங்களை பெற்றார். மகாலட்சுமியின் பரிபூரண அருளை ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்பதே அட்சய திருதியை பண்டிகையின் முக்கிய நோக்கமாகும். மகாலட்சுமி திருமாள் மார்பில் நீங்காமல் இருப்பதற்காக அட்சய திருதியை தினத்தன்றுதான் சிறப்பு வரம் பெற்றாள்.

வற்றாத செல்வம் பெருகும்

அட்சய திருதியை தினத்தன்றுதான் விஷ்ணுவின் 6வது அவதாரமான பரசுராமர் அவதரித்தார். அட்சய திருதியை நாளில் தான் விநாயகருக்கு மகாபாரதத்தை வியாசர் போதித்தார். பாண்டவர்கள் தங்களின் வனவாச காலத்தில் அட்சய பாத்திரம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான். அட்சய திருதியை நாளில் தான் மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றார்.

விவசாய பணிகள் வடஇந்தியர்கள்

நீண்டதூர புனித பயணங்களை அட்சய திருதியை நாளில் தான் தொடங்குவார்கள். வடமாநிலங்களில் அட்சய திருதியை தினத்தன்று திருமணம் நடத்துவதை புனிதமாக கருதுகிறார்கள். ஹரியானா, பஞ்சாபில் அதிகமாக உள்ள ஜாட்இனத்தவர்கள் அட்சய திருதியை தினத்தன்று மறக்காமல் மண் வெட்டி எடுத்துக் கொண்டு வயலுக்கு செல்வார்கள்.

ஜெயின் இனத்தவர்களுக்கு அட்சய திருதியை புனித நாளாகும். ஒரிசாவில் வீடு கட்ட, கிணறு தோண்ட சிறந்த நாளாக அட்சய திருதியை தினம் கருதப்படுகிறது. பீகார், உத்தரபிரதேசத்தில் நெல் விதைப்பை அட்சய திருதியை தினத்தன்று தொடங்குவார்கள்.

அட்சய திருதியை விரதம்

அட்சய திருதியை அன்று அதிகாலையில் நீராடி ஸ்ரீமந்த் நாராயணனின் நாமங்களை சொல்லி புதிய செயல்களை தொடங்க வேண்டும். குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் அட்சராயப் பியாசம் செய்யும் சடங்கு அட்சய திருதியை நாளில் செய்யப்படுகிறது.

அதிர்ஷ்டம் தரும் நாள்

சாபம் பெற்றதால் சந்திரன் தேய்ந்து தேய்ந்து அமாவாசை ஆகி விட்டார். மனம் திருந்திய சந்திரன் அட்சய திருதியை தினத்தன்று அட்சயவரம் பெற்றார். மீண்டும் அட்சய திருதியை தினத்தில் இருந்து வளரத் தொடங்கினார். அரிதான வேலையை சந்திப்பதை `அலப்ய யோகம்‘ என்கிறது சாஸ்திரம். அட்சய திருதியை, அலப்ய யோகத்தில் சேரும், ஆகவே அரிதான அட்சய திருதியை தவறவிட்டால் பிறகு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும். செல்வம் பெருகவும் நோய்கள் நீங்கவும், ஆரோக்கியம் அதிகரிக்கவும் இந்த ஆண்டு வீட்டிலேயே பாதுகாப்பாக இறைவனை வணங்கி வேண்டுவோம்.

அட்சய திருதியை நாளில் கல் உப்பு வாங்குங்கள்…செல்வம் வீடு தேடி வரும் குறைவில்லாமல் பெருகும்

அறையில் கோலமிடுங்கள். அதன்மேல் ஒரு மனைப் பலகையைப் போட்டு மேலே வாழையிலை ஒன்றினை இடுங்கள். இலையின் நடுவே கொஞ்சம் பச்சரியைப் பரப்பி அதன்மேல் ஒரு செம்பில் நீர் நிரப்பி மாவிலை, மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து கலசமாக்குங்கள்.

கலசத்தின் அருகே ஒரு படி, ஆழாக்கு அல்லது ஒரு டம்ளரில் நெல் நிறைத்து வையுங்கள். கலசத்திற்குப் பொட்டு, பூ வையுங்கள்.

லட்சுமி நாராயணர் படம் இருந்தால் அதனையும் வைத்து அலங்கரியுங்கள். பின்னர் குத்துவிளக்கினை ஏற்றி வையுங்கள். மஞ்சள் பிள்ளையார் பிடித்து வாழையிலையில் வலப்பக்கமாக வையுங்கள். நீங்கள் புதிதாக வாங்கிய பொருளை கலசத்தின் முன்பாக வையுங்கள்.

விலை உயர்ந்த பொருளாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அட்சய திருதியை நாளில் எல்லோராலும் வாங்க முடிந்த பொருளான உப்பை வாங்கி வைத்தாலே போதும். அஷ்டலட்சுமி கடாட்சம் உங்கள் வீடு தேடிவந்துவிடும்.

முதலில் விநாயகரை வேண்டிக் கொள்ளுங்கள். பின்னர் கலசத்தில் மகாலட்சுமியை எழுந்தருளும்படி பிரார்த்தியுங்கள். உங்களுக்குத் தெரிந்த விஷ்ணு,லட்சுமி, சிவன்பார்வதி, குபேரன், துதிகளைச் சொல்லுங்கள். அல்லது கேளுங்கள்.