இலங்கையில் இது வரையில் புதிய நோய்களால் 24 பேர் பாதிப்பு?

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் கோரத் தாண்டவத்திற்கு மத்தியில், அங்கு புதிதாக கருப்பு பூஞ்சை மற்றும் வெள்ளைப் பூஞ்சை போன்ற நோய்களால் மக்கள் அவஸ்தைப்பட்டு வருகின்றனர். தற்போது இலங்கையிலும் அதிகம் பேசுபொருளாக கருப்பு பூஞ்சை நோய் மாறியுள்ளது.

இந்த நிலையில், இலங்கைக்கு கறுப்பு பூஞ்சை நோய் என்பது புதிதானதல்ல என மருத்துவர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார். அதன்படி, இவ்வாண்டில் இதுவரையில் கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 24 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள போதிலும் அவர்களில் யாரும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர் அல்ல என்று பூஞ்சை நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ப்ரீமாலி ஜயசேகர தெரிவித்தார்.

இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், நியூகோ மைஸிஸ் எனக் கூறப்படும் கறுப்பு பூஞ்சை நோய் இலங்கைக்கு புதிதானதல்ல.

இலங்கையில் கடந்த 2019 இல் இந்நோயால் பாதிக்கப்பட்ட 42 நோயாளர்களும் , 2020 இல் 24 நோயாளர்களும், இவ்வாண்டில் இதுவரையில் 24 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர் என்றார்.

இந்நோய் தொடர்பில் மக்கள் வீண் அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ளத் தேவையில்லை என்றும் , இதற்கு சிகிச்சையளிப்பதற்கு தேவையான சகல மருந்துகளும் இலங்கையில் காணப்படுவதாகவும் வைத்திய நிபுணர் ப்ரீமாலி ஜயசேகர மேலும் சுட்டிக்காட்டினார். இதேவேளை,நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு இந்த ​நோய் வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.