இலங்கை சந்தித்துள்ள பேரழிவு! கப்பல் வடிவில் வந்த ஆபத்து

இலங்கை கடற்பரப்பிற்குள் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலை அனுமதித்தமை குறித்து சுயாதீன விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என்று ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,

கப்பல் தொடர்பில் இடம்பெற்ற விடயங்கள் அனைத்தும் சந்தேகத்தை ஏற்படுத்துபவையாக காணப்படுகின்றன.

கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டமை கப்பலில் தீப்பிடித்தமை உட்பட சகல சம்பவங்கள் குறித்த உண்மையையும் அரசாங்கம் பொதுமக்களிற்கு தெரிவிக்கவேண்டும்.

நாடு சந்தித்த மிகமோசமான இயற்கை பேரழிவுக்கு காரணமான அரசியல்வாதிகள், அதிகாரிகளிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இதேவேளை கப்பல் இலங்கைக்குள் நுழைந்தவேளை கப்பலில் தீ காணப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. கப்பலிற்கு இரண்டு துறைமுகங்களில் அனுமதி மறுக்கப்பட்டது.

இலங்கை கடற்பரப்பின் முக்கிய பகுதிக்குள் நுழைவதற்கு கப்பலிற்கு யார் அனுமதி வழங்கியது என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. அனுமதி வழங்கப்பட்டமைக்கு என்ன காரணம்?

கப்பல் மூழ்குவதற்கு முன்னர் அதிகாரிகள் ஏன் தீயை அணைக்க முயலவில்லை, நடுக்கடலிற்கு கொண்டு செல்ல முயலவில்லை.

ஆபிரிக்க நாடுகளில் ஆபிரிக்க கடல்களில் அந்த நாடுகளின் ஊழல் ஆட்சியாளர்களின் உதவியுடன் – ஆபத்தான பொருட்களை கொண்டு சென்ற கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இது இலங்கையிலும் இடம்பெறுகின்றதா?

இலங்கைக்கு நஸ்டஈடு கிடைக்கும் என ஒரு அமைச்சர் தெரிவித்துள்ளார். கப்பல்களை மூழ்கடிப்பதன் மூலம் டொலர்களை உழைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா? அரசாங்கம் இதற்கு உரிய பதிலை வழங்கவேண்டும் என்றார்.