நயினை நாகபூசணி அம்மன் வருடாந்த உற்சவம் தொடர்பில் திடீர் முடிவு

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் வருடாந்த ஆலய உற்சவம் வரும் 10ஆம் திகதி நடைபெறவிருந்த நிலையில், நாட்டில் உள்ள கொரோனா சூழ்நிலை காரணமாக ஆலய உற்சவம் இடம்பெறாதென ஆலய அறங்காவலர் சபையினர் அறிவித்துள்ளனர்.

இம்மாதம் 10ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவிருந்த ஆலய வருடாந்த மகோற்சவத்தினை 15 பேருடன் நடத்த சுகாதாரப் பிரிவினர் அனுமதித்திருந்தனர். இந்த நிலையில் இன்று காலை அவசரமாக கூடிய ஆலய அறங்காவலர் சபையினர், 10ஆம் திகதி மகோற்சவத்தை நடத்துவதில்லையென முடிவெடுத்துள்ளனர்.

ஆலய மகோற்சபத்தில் மட்டுப்படுத்தளவிலான மக்களே அனுமதிக்கப்படக்கூடிய சாத்தியம் உள்ள நிலையில் , பிரதேச மக்கள் அதிகளவில் ஆலயத்தில் கூடும் வாய்ப்புள்ளதால் இந்த முடிவை எடுத்ததாகவும் அறங்காவலர் சபையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மகோற்சவத்தை மீள எப்பொழுது நடத்துவதென விவாதிக்கப்பட்டதாகவும், அதற்காக பல்வேறு திகதிகள் பரிந்துரைக்கப்பட்ட போதும், இறுதி திகதி இதுவரை தீர்மானிக்கப்படவில்லையென ஆலய அறங்காவலர் சபையினர் மேலுல் கூறியுள்ளனர்.