யாழ் கடலட்டை பண்ணைக்கு சீன நாட்டவர் இருவர் உட்பட 3 பேர் முதலாளிகள்; வெளியான புதிய தகவல்!

யாழ்.அரியாலையில் உள்ள கடலட்டை பண்ணை சீனர்களையும் உள்ளடக்கிய நிறுவனம் ஒன்றின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளமை தற்பொழுது தொியவந்துள்ளது.

அரியாலையில் இயங்கிவரும் கடல் அட்டைத் தொழிற்சாலையில் சீனர்கள் பணியில் ஈடுபட்டுள்ளமை தொடர்பான தகவல்கள் வெளியான நிலையில் , குறித்த தொழிற்சாலை சீனர்களையும் பணிப்பாளர்களாக உள்ளடக்கி இலங்கைகம்பனி பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட் டுள்ளமை ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

அதன்படி குயிலன் பிரைவேட் லிமிட்டெட் என்ற பெயரில் பதிவுசெய்யப்பட்டுள்ள இந்தக் கடலட்டை நிறுவனதின் 3 பணிப்பாளர்களில் ஒருவராக நீர்கொழும்பைச் சேர்ந்த தம்மிக்க டி சில்வா என்பவரது பெயர் பதிவாகியுள்ளது. அத்துடன் ஏனைய இருவரும் சிச்சாவே லீ மற்றும் யுவான் சென் ஆகிய சீனர்கள் எனவும் கூறப்படுகின்றது.

இவர்களின் வதிவிட முகவரியும் ஒப்பந்தத்தில் சீனா என்றே குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அந்த நிறுவனப் பதிவு ஒப்பந்தம் கடல் தொழில் சார்ந்ததாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிறுவனத்தை அமைக்கத் தேவையான பரப்பளவு, கொடுப்பனவுகள், பங்குதாரர்களுக்கு இடையிலான பங்கீடுகள் என்பன குறித்தும் இந்தத் தொழிற்சாலை பதிவு ஒப்பந்தத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.