அரசியலமைப்புக்கு முரணாக பசிலின் நியமனம் – மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் சுட்டிக்காட்டு

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சகோதரர் பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள விடயமானது, அரசியலமைப்பையும் மக்களின் இறையாண்மையையும் முற்றிலும் புறக்கணிக்கும் செயற்பாடு என, மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் சமர்ப்பிக்கப்பட்ட மாவட்ட ரீதியான வேட்பாளர் பட்டியல் மற்றும் தேசியபட்டியல் ஆகியவற்றில் பசில் ராஜபக்சவின் பெயர் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என அந்த அமைகப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

பொதுஜன பெரமுனவினால் செய்யப்பட்டிருக்கும் தேசியபட்டியல் நியமனத்தின் அரசியலமைப்பிற்கு அமைவான தன்மை என்ற தலைப்பில் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தலின் போது மாவட்ட ரீதியான வேட்பாளர் பட்டியல் மற்றும் தேசியபட்டியல் பெயர் உள்ளடக்கப்பட்டிருக்காத பசில் ராஜபக்ச வெற்றிடமாகியிருக்கும் தேசியபட்டியல் ஆசனத்திற்கு நியமிக்கப்பட்டிருப்பதாக மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த விடயமானது, அரசியலமைப்பையும் மக்களின் இறையாண்மையையும் முற்றிலும் புறக்கணிக்கும் செயற்பாடு என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி இரட்டைப்பிரஜாவுரிமையைக் கொண்டிருந்தமையினால் பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராகும் தகுதியை இழந்திருந்திருந்த விடயத்தையும் நினைவில்கொள்ள வேண்டும் என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினரான ஜயந்த கெட்டகொட இராஜினாமா செய்தமையைத் தொடர்ந்து வெற்றிடமாகியிருக்கும் தேசியப்பட்டியல் ஆசனத்திற்கு பசில் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அவதானம் செலுத்தியிருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் பசில் ராஜபக்சவின் நியமனம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக சரத் பொன்சேகாவை ஐக்கிய தேசியக் கட்சி, 2016 இல் நியமித்த விடயத்தையும், 2020 ஜனவரியில், சமன் ரத்னபிரிய இதேபோன்று நியமிக்கப்பட்ட விடயத்தையும், மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் விமர்சித்திருந்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தேர்தலின்போது பரிந்துரைக்கப்படாத ஒரு அரசியல் கட்சியின் எந்தவொரு உறுப்பினரையும் நியமிக்கும் நடைமுறையானது மக்களின் இறையாண்மையின் ஒரு பகுதியாக இருக்கும் மக்களின் உரிமையை மீறுவதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு குறிப்பிடுவது போல் மக்கள் உண்மையில் குடியரசின் இறையாண்மை கொண்டவர்கள் எனின், அரசியல் கட்சி ஒன்று நாடாளுமன்றத்திற்கு நியமிக்க விரும்பும் உறுப்பினர்கள் தொடர்பில் தேர்தலுக்கு முன்னதாக மக்கள் அறிந்துகொள்ள வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள் தமது நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட வெற்றிடங்களை நிரப்ப விரும்பும் நபர்களை நியமிக்க அனுமதிப்பது, மக்களின் உரிமையின் மதிப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக அமையுமெனவும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.