யாழில் திடீர் மரணமடைந்த உப அதிபரின் மரண சடங்கில் கலந்துகொண்டவர்களுக்கு சிக்கல்

யாழில் அண்மையில் திடீர் மரணமடைந்த தென்மராட்சி மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியின் உப அதிபரின் பிள்ளைகள் மூவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தென்மராட்சி சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 17ஆம் திகதி வீரசிங்கம் மத்தியகல்லூரியின் உப அதிபர் திடீர் உடல்நலப் பாதிப்புக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்திருந்தார்.

இதனையடுத்து அவருடைய கல்லூரியில் சில மாணவிகளுக்கு ஏற்கனவே கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கல்லூரியின் சில வகுப்புகளும் மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில், மரணம் நிகழ்ந்த அன்று உப அதிபர் சாவகச்சேரியில் தன்னை அன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அவருக்கு கொரோனாத் தொற்று இல்லை என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் அன்று மாலையே உப அதிபர் உயிரிழந்திருந்த நிலையில், அவருக்கு கொரோனாத் தொற்று இல்லை என்று அன்டிஜன் அறிக்கை தெரிவித்திருந்ததால் பாடசாலை ஆசிரியர்கள், நண்பர்கள் என பெருமளவானோர் இறுதிச் சடங்களில் பங்கு கொண்டிருந்தனர்.

இதனையடுத்து இன்று சுகாதாரப் பிரிவினர் உயிரிழந்த உப அதிபரின் இல்லத்தில் அவருடைய பிள்ளைகளுக்கும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் அவருடைய பிள்ளைகள் மூவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, உயிரிழந்த உப அதிபரின் அயலவர்களில் இருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.