தமிழ் இராச்சியத்தின் தோற்றம் பற்றிய முன்னைய வரலாற்று பார்வையை மீள்வாசிப்பிற்கு உற்படுத்தும் அரிய தமிழ் கல்வெட்டு திருகோணமலையில் கண்டுபிடிப்பு
திருகோணமலை மாவட்டத்தில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கி.பி.13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த இக்கல்வெட்டு இலங்கைத் தமிழர் வரலாறு பற்றி இதுவரை அறியப்படாதிருந்த புதிய பல வரலாற்று உண்மைகள் கூறுகின்றது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
புகைபடர்ந்திருக்கும் இலங்கைத் தமிழரின் ஆதிகால, இடைக்கால வரலாற்றுக்குப் புது வெளிச்சமூட்டி வருவதில் தொல்லியற் கண்டுபிடிப்புக்களுக்கு முக்கிய இடமுண்டு. அக்கண்டுபிடிப்புக்களில் கல்வெட்டுக்கள் நம்பகரமான முக்கிய சான்றுகளாகப் பார்க்கப்படுகின்றன.

அவை இலக்கியங்களைப் போல் விரிவான வரலாற்றுச் செய்திகளைத் தராவிட்டாலும் அவை வரலாற்றுச் சம்பவங்கள் நடந்த சமகாலத்திலேயே பெரும்பாலும் எழுதப்பட்டிருப்பதினால் அவற்றில் இருந்து அறியப்படும் வரலாற்றுச் செய்திகள் நம்பகரமானதாகவே பார்க்கப்படுகின்றன.
இவை ஒரு நாட்டில் வாழும் பல இன மக்கள் பற்றிய பாரம்பரிய வரலாற்று நம்பிக்கைகளை மீளாய்வு செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இதற்கு திருகோணமலை மாவட்டத்தில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டையும் உதாரணமாகக் குறிப்பிடலாம்.
முதலில் இக்கல்வெட்டுப் பற்றிய செய்தி திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் (J.S.Arulraj) என்பவரால் வைத்திய கலாநிதி த.ஜீவராஜிக்கு (T. Jeevaraj) தெரியப்படுத்தப்பட்டதன் மூலம் அது பற்றிய தகவல் எமக்கும் பரிமாறப்பட்டது

அவர்கள் அனுப்பிய புகைப்படத்தைப் பார்த்து இக்கல்வெட்டின் முக்கியத்துவத்தைத் தெரிந்துகொண்ட நாம் அக்கல்வெட்டை ஆய்வு செய்வதற்கு தொல்லியற் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியைப் பெற்று யாழ்ப்பாணப் பிராந்திய தொல்லியற் திணைக்கள ஆய்வு உத்தியோகத்தர்களான பா.கபிலன், வி. மணிமாறன் மற்றும் முன்னாள் தொல்லியல் விரிவுரையாளர் க.கிரிகரன் ஆகியோருடன் 30.01 2021 அன்று திருகோணமலை சென்றிருந்தோம்.
இந்நிலையில் திருகோணமலை மாவட்ட வரலாற்றுச் சின்னங்களைக் கண்டறிந்து பாதுகாப்பதில் அதிக அக்கறையுடன் செயற்பட்டுவரும் வைத்திய கலாநிதி த.ஜீவராஜூடன் வைத்திய கலாநிதி அ.ஸதீஸ்குமார், கிராம உத்தியோகத்தர் நா.சந்திரசேகரம் மற்றும் கோமரன்கடவல பிரதேச செயலக உத்தியோகத்தர் நா.ஜெகராஜ் ஆகியோரும் கல்வெட்டைப் படியெடுக்கும் பணியில் ஆர்வத்துடன் இணைந்து பணியாற்றியமை எமக்கு மனமகிழ்வைத் தந்ததுடன், அச்சமற்ற சூழ்நிலையில் இக்கல்வெட்டைப் படியெடுக்கவும் வாய்ப்பாக இருந்தது.
இக்கல்வெட்டு திருகோணமலை நகரில் இருந்து ஏறத்தாழ 50 கி.மீ தொலைவில் திருகோணமலை மாவட்டத்தில் தனி நிர்வாகப் பிரிவாக உள்ள கோமரன்கடவல பிரதேசத்தில் உள்ள முக்கிய வீதியுடன் இணைந்திருக்கும் காட்டுப்பகுதியில் காணப்படுகின்றது.






