திருமணம் செய்ய மறுத்த இளம்பெண் சுட்டுக்கொலை: வவுனியாவில் பதற்றம்!

வவுனியாவில் இளம்பெண் ஒருவர் மர்ம நபரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளார்.

இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா, நெடுங்கேணி – சேனைக்குளம் பகுதியில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பெண் மீது இனம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விவசாய தேவைக்காக பசளை வாங்க தாயாருடன் சென்ற நிலையில், உணவருந்திவிட்டு செல்ல முடிவெடுத்து மீண்டும் வீடு நோக்கி செல்கையில் வீதியில் நீர் நிறைந்திருந்தமையால் தாயாரை வீதியில் இறக்கிவிட்டு நீர் நிறைந்திருந்த இடத்தை கடந்த போதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காவல்துறையின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் நாட்டு துப்பாக்கியால் சுடப்பட்டே பெண் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியன் துப்பாக்கியால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் சத்தியகலா ( 31) என்ற பெண்ணே கொல்லப்பட்டுள்ளார்.

வவுனியா வடக்கு சேனைப்பிலவு எல்லைக்கிராமத்தில் இந்த சம்பவம் நடந்தது.

கொல்லப்பட்டவரும், கொலையாளியும் அயல்வீட்டுக்காரர்கள். இன்று காலை தாயாரும், மகளும் கமநல சேவைகள் திணைக்களத்திற்கு சென்றுவிட்டு திரும்பி வரும் போது, நடுவீதியில் வைத்து இடியன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.

இந்த சம்வத்துடன் தொடர்புடைய இளைஞன், ஏற்கனவே கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலையானவர்.

தன்னை திருமணம் செய்யுமாறு யுவதியை வற்புறுத்தி வந்த நிலையில், யுவதி பொலிஸ் முறைப்பாடு செய்தமையால் கோபமடைந்து சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.