யாழில் காணொளி அழைப்பில் தூக்கில் தொங்கிய இளைஞர்; வெளியான மேலதிக தகவல்

யாழ்ப்பாணம், நாச்சிமார் கோயிலடியில் தங்கியிருந்த இளைஞன் ஒருவர், காதலிக்கு வீடியோ அழைப்பை ஏற்படுத்தி தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.

யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல அச்சகத்தில் கணினி வடிவமைப்பாளராக பணியாற்றி வந்த வீரசிங்கம் ஸ்ரலின் ஜெயசிங்கம் (31) என்ற இளைஞனே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் நேற்று மாலை யாழ்ப்பாணம் இராமநாதன் வீதியில், நாச்சிமார் கோயிலடியை அண்மித்த மேல்மாடி கட்டடத் தொகுதியில் நடந்தது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை பகுதியை சேர்ந்த இந்த இளைஞன், யாழ்ப்பாணத்திலுள்ள அச்சகத்தில் பணியாற்றி வந்தார். குறித்த இளைஞர் வவுனியாவை சேர்ந்த யுவதியொருவரை அவர் காதலித்து வந்த நிலையில் , இருவருக்கும் இடையில் சில முரண்பாடுகள் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

இதையடுத்து, நேற்று திடீரென காதலியை வீடியோ அழைப்பில் தொடர்பு கொண்டு, தற்கொலை செய்யப் போவதாக கூறியுள்ளார். இதன்போது காதலி அவரை சமாதானப்படுத்த முயன்றபோது , காதலி பார்க்கும் விதமாக தொலைபேசியை அவர் வைத்த போது, காதலி அழைப்பை துண்டித்து விட்டு, உடனடியாக அவர் பணியாற்றிய நிறுவனத்திற்கு தகவல் வழங்கினார்.

அச்சக த்தினர் உடனடியாக இளைஞனின் தங்குமிடத்திற்கு விரைந்து சென்ற போது, இளைஞனின் அறை பூட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து அவர்கள் உள்ளெ நுழைந்து பார்த்த போது, இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்திருந்தார்.

சம்பவம் தொடர்பில் இறப்பு விசாரணையை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னெடுத்தார்.

இந்நிலையில் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.