கொழும்பு – கோட்டையில் பகுதியில் தனது தங்கையை தனியாக விட்டுவிட்டு காதலனுடன் பெண் ஒருவர் தப்பிச் சென்றுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் கடந்த 21ஆம் திகதி செவ்வாய்கிழமை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
மாத்தறை – வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதி ஒருவர் தனது 14 வயது சகோதரியுடன் வெலிகமவில் இருந்து கொழும்பு நோக்கி வருகை தந்துள்ளார்.
பின்னர் குறித்த சிறுமியான தனது சகோதரியை கொழும்பு கோட்டையில் விட்டுவிட்டு தனது காதலனுடன் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
சகோதரியால் கைவிடப்பட்ட அச்சிறுமி கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தில் அழுது கொண்டிருந்த போது காவல்துறையினர் அவரை மீட்டு விசாரித்துள்ளனர்.
இதன்போது அந்த சிறுமி தெரிவிக்கையில்,
நாங்கள் வெலிகம – இப்பாவல பகுதியில் பின்தங்கிய பிரதேசத்தில் வசிப்பவர்கள் என்றும், வாழ்க்கையில் முதல் தடவையாக கடந்த 21 ஆம் திகதி கொழும்பு வந்ததாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
தனது தாயிடம் வெலிகமவில் மருந்து வாங்க செல்லப்போவதாக கூறி பணம் வாங்கிக் கொண்டு தங்கையுடன் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெலிகமவில் இருந்து குறித்த இருவரும் கொழும்பு – மாத்தறை பேருந்து ஒன்றில் கொழும்பிற்கு வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு வந்தவுடன் சகோதரியின் தொலைபேசிக்கு காதலனிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. பின்னர் அவர் தனது சகோதரியை அழைத்து 1000 ரூபாயை கொடுத்துவிட்டு மாத்தறை பேருந்தில் ஏறி வெலிகமவிலுள்ள வீட்டிற்கு செல்லுமாறு கூறிவிட்டு சென்றுள்ளார்.
விசாரணையின் பின்னர் சிறுமியை காவல்துறையினர் அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.