யாழில் பதில் நீதிபதியின் மெத்தனத்தால் நேர்ந்த விபரீதம்; பரிதாபமாக உயிரிழந்த பிரபல ஆசிரியர்

யாழ்.மாவட்டச் செயலகத்தை அண்மித்த பகுதியில் பதில் நீதிபதி ஒருவரின் காரில் மோதி பிரபல அளவையியல் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து நேற்றுமாலை இடம்பெற்றுள்ள நிலையில் சம்பவத்தில், யாழ்.சென் ஜோன்ஸ் கல்லூரியின் ஓய்வு பெற்ற ஆசிரியரான வேலுப்பிள்ளை யுகபாலசிங்கம் என்பரே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

நேற்றைய தினம் இரவு மாவட்ட செயலகத்தை அண்மித்த வீதியில் பதில் நீதிபதி ஒருவருடைய கார் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் சடுதியாக காரின் கதவு திறக்கப்பட்டுள்ளது.

இதன்போது அந்த வீதியால் பயணித்த ஆசிரியர் காரின் கதவு மீது மோதி வீதியில் விழுந்த நிலையில் பின்னால் வந்த பேருந்து முதியவர் மீது மோதியுள்ளது.

இதில் படுகாயம் அடைந்த ஆசிரியர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அதேவேளை விபத்து இடம்பெற்றவுடன் காயம் அடைந்தவரை வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்க விபத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்க நீதிபதி தனது சாரதி மற்றும் உயிரிழந்தவர் உடன் பயணித்த சிறுமி ஆகியோரை மட்டும் அனுப்பியதுடன், காரில் இரத்தம் படக்கூடாது என கூறியதாகவும் தெரியவருகிறது.

சம்பவத்தையடுத்து பொலிஸ் நிலையத்தில் பெருமளவு சட்டத்தரணிகள் சில நீதிபதிகள் சென்று சமாதானத்தை ஏற்படுத்த முயற்சித்ததாகவும் தெரியவருகின்றது. அதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கார் சாரதி மற்றும் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் சம்பவம் தொடர்பாக இன்று காலையே பதில் நீதிபதியும், சாரதியும் பொலிஸ் நிலையத்திற்கு வாக்குமூலம் வழங்க சென்றுள்ளனர். இந்நிலையில் இந்த விபத்து சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.