யாழ்.வேலணை வைத்தியசாலை நிர்வாகத்தின் மோசமான செயல்! சிகிச்சை பெறச்சென்ற பெண் மரணம்

மாரடைப்பு காரணமாக சிகிச்சைக்காக வேலணை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பெண்ணை வைத்தியர் இல்லை என கூறி திருப்பி அனுப்பியதால் அவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் வைத்தியசாலையில் மெத்தன போக்கே பெண்ணின் மரணத்திற்கு காரணம். என உறவினர்கள் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளதுடன். தீவக சிவில் அமைப்புக்களும் குற்றஞ்சாட்டியுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, வேலணை மேற்கு பகுதியை சேர்ந்த குடும்பப் பெண்ணொருவருக்கு கடந்த பொங்கல்தினமான 14 ஆம் திகதி அதிகாலை வீட்டில் நீராடியவேளை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து உறவினர்கள் பெண்ணை முச்சக்கர வண்டிமூலம் அவசரமாக வேலணை பிரதேச வைத்தியசாலைக்குச் கொண்டு சென்றுள்ளனர். வைத்தியசாலையில் கடமையிலிருந்த சிற்றூழியர் ஒருவர் வைத்தியர் இல்லையென்று தெரிவித்துள்ளார்.

ஆனாலும் வைத்தியர் வைத்தியசாலை மருத்துவர்களுக்கான விடுத்தியில் தங்கியிருந்துள்ளார்.மேலும் அதன்போது வைத்தியசாலை ஊடாக ஊர்காவற்றுறை வைத்தியசாலைக்கு நோயாளரை கொண்டு செல்வதற்கு

அன்புலன்ஸ் வண்டி கோரப்பட்ட போதும் வைத்தியசாலையில் அன்புலன்ஸ் வாகனசாரதி இல்லையென தெரிவித்துள்ளனர்.அதேவேளை வைத்தியசாலையில் அருகில் அமைந்திருக்கும் பிரதேச செயலகத்தில் சேவையில் இருக்கும் 1990 அன்புலன்ஸ் வண்டியினை பெற்றுக் கொடுப்பதற்கும் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.

இந்நிலையில் நோயாளிக்கு வைத்தியசாலையால் எந்தவித முதலுதவி சேவைகளும் வழங்கப்படாத நிலையில் நோயாளரின் அவசர நிலைகருதி உறவினர்கள் அவசர அவசரமாக தாம் கொண்டுவந்த முச்சக்கரவண்டியிலேயே ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனாலும் இடைநடுவிலேயே பெண்ணின் உயிர் பிரிந்துவிட்டது. இதன்போது வேலணை மேற்குப் பகுதியை சேர்ந்த குடும்பப் பெண்ணாண திருமதி நித்தியா திருவருள் (வயது-46) என்பவரே மரணமடைந்தவராவார்.

வைத்தியசாலை நிர்வாகத்தின் மெத்தனப் போக்கே குடும்பப் பெண்ணின் மரணத்துக்கு காரணமாக அமைந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வைத்தியசாலை நிர்வாகத்தினரின் செயற்பாடுகள் மனிதாபிமானமற்றதாக காணப்படுவதுடன் குறித்த பெண்ணின் மரணத்துக்கு வைத்தியசாலை நிர்வாகம் பொறுப்புக் கூறவேண்டும் என தீவக சிவில் சமூகத்தின் செயலாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் நேற்றையதினமும் மாலை 5 மணியளவில் பாம்புக்கடிக்கு சிகிச்சை பெறச்சென்ற நோயாளரை வைத்தியர் உணவு அருந்தச் சென்றுள்ளதால் ஒரு மணிநேரம் தாமதிக்குமாறு வைத்தியசாலை பணியாளர்கள் தெரிவித்ததால்

உறவினர்கள் பயத்தின் காரணமாக ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளதாக அவர் தெரிவித்தார். மிகப் பின்தங்கிய தீவகப் பிரதேசத்தில் மருத்துவ சேவையினை துஸ்பிரயோகம் செய்பவர்கள் மீது

பொதுநல வழக்கினை தொடர்வதன் மூலம் நீதியினை பெறுவதற்கு எதிர்காலத்தில் முயற்சிகள் எடுப்பதன் மூலம் பொறுப்பற்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.