கொழும்பு பிரபல பாடசாலை மாணவிக்கு நடந்தது என்ன? பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்!

கொழும்பு 4 இல் அமைந்துள்ள பிரபல பெண்கள் பாடசாலைக்கு முன்பாக ஒன்று கூடிய பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாடசாலை அதிபர் மற்றும் அங்கு பணியாற்றும் கல்வி சாரா ஊழியர் ஒருவருக்கு எதிராக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையில் தரம் 11 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவரை கல்வி சாரா ஊழியர் ஒருவர் விடுதிக்கு அழைத்துச் சென்று துஸ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் கடந்த ஆண்டு இறுதிப் பகுதியில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ள போதிலும், அந்த ஊழியருக்கு எதிராக இது வரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டும் எனவுன், சம்பந்தப்பட்ட ஊழியரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாடசாலையில் மாணவிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லையென தெரிவித்த பெற்றோர்கள், பாடசாலையில் பணியாற்றும் அனைத்து ஆண் ஊழியர்களையும் நீக்கிவிட்டு பெண் ஊழியர்களை நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

அதேசமயம் , பாடசாலை வளங்களை துஷ்பிரயோகம் செய்வது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அதிபருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும் இது குறித்து பேசுவதற்கும், பாடசாலைக்குள் பிரவேசிப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெற்றோர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை , மாணவியின் தந்தை மறுத்துள்ளதுடன், அதிபர் மற்றும் குறித்த கல்வி சாரா ஊழியர் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிராகரித்ததுடன் , தனது மகளின் கல்வி முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அத்துடன் பாடசாலை ஆசிரியர்கள் சிலர் அதிபரை பதவி விலக்க வேண்டும் என்ற நோக்கில் செயற்படுவதாகவும், அதற்கு தனது மகளின் விடயத்தை பயன்படுத்திக்கொண்டதாகவும் அவர் கூறினார்.

துஷ்பிரயோக குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள கல்வி சாரா ஊழியரை தனக்கு தனிப்பட்ட முறையில் நன்கு தெரியும் என தெரிவித்த அவர், சிறு வயது முதல் தனது மகளை நன்கு அறிந்தவர் என்றும் குறிப்பிட்டார். எனினும், தனது மகளிடம் இருந்து கடிதம் ஒன்றைப் பெற்றுக்கொண்டு, பாடசாலையிலிருந்து அவரை இடைநிறுத்தியுள்ளதாகவும் தந்தை குற்றம் சுமத்தியுள்ளார். இந்த போராட்டத்தின் போது பெற்றோர்கள் இரு தரப்பாக மாறியிருந்தனர்.

ஒரு தரப்பினர் அதிபருக்கு ஆதரவாவும் , மற்றைய தரப்பினர் அதிபருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். பாடசலையின் அதிபர் சிறப்பானவர் எனவும், பாடசாலைக்கு களங்கம் ஏற்படும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் எனவும் ஒரு தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் முரண்பட்டனர்.

அதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் வலய கல்வி பணிமனை அதிகாரிகள் உரிய பதில் வழங்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.