பாடசாலை மாணவர்களை குறிவத்த கண் மருத்துவ மாபியாக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த மருத்துவர் பிரியந்தினி விவகாரம் தற்போது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கிளிநொச்சி மருத்துவர் பிரியந்தினியின் மற்றுமோர் முகநூல் பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பப்ளிசிட்டிப் போஸ்ட் NO 1:
இலங்கையின் சுகாதாரத்துறையினூடு மக்களுக்கு இலவசமான சேவைகள் என்னென்ன வழங்கப்படுகின்றன என்பது பொதுமக்கள் அறிந்திருக்க வேண்டிய ஒன்று, இந்த கருத்து தெளிவு இருப்பின் பல்வேறு அனாவசியமான சிக்கல்களைத் தவிர்த்துக்கொள்ளலாம்.
சுகாதார வைத்திய அதிகாரி (MOH)குறித்தா கால இடைவெளியில் PHI (public health inspeector) இனது ஆயத்தப்படுத்தலுடன் பாடசாலை சிறார்கள் அனைவரையும் தலைமுதல் கால் வரை பரிசோதிப்பர்.
வைத்திய பரிசோதனை இடம்பெறுகின்ற தினம் தவிர்ந்த வேறு ஒரு சந்தர்ப்பத்தில் மாணவர் ஒருவர் ஏதேனும் ஒரு சுகாதார பிரச்சினையினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என வகுப்பாசிரியர் ஊகிக்கும் பட்சத்தில் அதிபர் ஊடாக பிரதேச பொது சுகாதார பரிசோதகரிடம் (PHI)விடயத்தை தெரியப்படுத்தி அவரது ஏற்பாட்டில் குறித்த பிரிவுக்குரிய சுகாதார வைத்திய அதிகாரியிடம் பெற்றோர் / பாதுகாவலரின் பங்குபற்றுதலுடன் குறித்த மாணவரை காண்பித்து அடிப்படை மருத்துவ பரிசோதனைகளை பூர்த்தி செய்யலாம்.
சுகாதார பிரச்சினைகளை கொண்ட மாணவர்கள் தமது பெற்றோர் ஊடாக பொது சுகாதார பரிசோதகரை அணுகியும் இப்பரிசோதனையை மேற்கொள்ள முடியும்.
MOH தனது பரிசோதனையின்போது மாணவருக்கு ஏதேனும் சுகாதார பிரச்சினைகள் இருப்பதை கண்டறிவாராயின் ,குறித்த மாணவரை மேலதிக மருத்துவ பரிசோதனைக்காக #அரசவைத்தியசாலைகளில் உள்ள பொருத்தமான விசேட சிகிச்சை நிலையங்களுக்கு இங்கே இணைக்கப்பட்டுள்ள H 606 அட்டையின் துணையுடன் நேரடியாக வழிப்படுத்துவார்.
இவ் அட்டையை பெற்றுக்கொண்ட மாணவர் பாடசாலை சீருடையில் பெற்றோர் / பாதுகாவலர் ஒருவரையும் அழைத்துக்கொண்டு இவ் அட்டையின் பின்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள தினத்தில் (பெரும்பாலும் சனிக்கிழமை) தான் வழிப்படுத்தப்பட்டுள்ள விசேட சிகிச்சை நிலையத்துக்கு நேரில் சென்று உரிய எத்தகைய பரிசோதனைகளையும் சிகிச்சைகளையும் முற்றிலும் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.
இவ் அட்டையை வைத்திருக்கும் மாணவர் வெளிநோயாளர் பிரிவை தவிர்த்து நேரடியாக விசேட சிகிச்சைப் பிரிவுக்கு சென்று தனக்குரிய சிகிச்சைகளை #காலதாமதமின்றி பெற்றுக்கொள்ள முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.
குறித்த மாணவரை பரிசோதித்து சிகிச்சை வழங்கும் விசேட வைத்திய நிபுணர் அதுபற்றிய விபரங்களை இவ் அட்டையின் இறுதிப்பகுதியில் குறிப்பிட்டு ஒப்பமிட்ட பின்னர் பெற்றோர் ஊடாக வகுப்பாசிரியரிடம் இவ் அட்டை மீள ஒப்படைக்கப்படும்.
இறுதி படிநிலையாக PHI பாடசாலையில் / மாணவரது வீட்டுக்கு தொடர் தரிசிப்பு மேற்கொண்டு இவ் அட்டையை பெற்றுக்கொண்ட மாணவரது சுகாதார பிரச்சனை தீர்க்கப்பட்டிருப்பதை உறுதிசெய்து கொள்வார்.
பாரதூரமான சுகாதார பிரச்சினையினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இவ்வழிமுறை ஊடாக அனுப்பப்பட்டு கொழும்பு வரை சென்று சத்திர சிகிச்சை உள்ளிட்டவற்றை பெற்று பூரணமாக குணமடைந்து தமது கல்வி நடவடிக்கைகளை வழமைபோன்று முன்னெடுக்க முடியும்.
கண்டாவளை MOH. இல் முறைப்பாட்டுப் பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது!! எனது பிரதேசத்தில் எவ்வாறான மருத்துவப் பிரச்சினைகளிருப்பினும் முறையிடலாம்.. உடனடியாக தீர்த்துவைக்கப்படும்.
இங்கு ஒரு MOH பெரும்பாலும் சீட்டிலேயே இருப்பாராயின் .. அந்த இடத்தில் சுகாதாரச்செயற்பாடுகள் சரிவர கண்காணிக்க நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதையும் பொதுமக்கள் புரிந்து கொள்ளவேண்டும் என மருத்துவர் பிரியந்தினை குறிப்பிட்டுள்ளார்.