யாழில் மஹிந்தவுக்கு எதிர்ப்பு வெளியிட்ட தாய்மாரின் தலைமுடியை பிடித்து இழுத்துச் சென்ற பொலிஸார்

போராட்ட பேரணி ஆரம்பமாகி முன்னோக்கி நகர்ந்து செல்கையில்,பொலிஸார் உட்பட படையினர் போராட்டத்தை கலைக்க முற்பட்ட சம்பவத்தினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், இன்று மட்டுவில் பகுதியில் நிகழ்வொன்றில் கலந்து கொள்கிறார்.

இந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மட்டுவில் வண்ணாத்திப்பாலம் பொருளாதார மத்திய நிலையம் முன்பாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்ட பேரணி ஆரம்பமாகி முன்னோக்கி நகர்ந்து செல்கையில்,பொலிஸார் உட்பட படையினர் போராட்டத்தை கலைக்க முற்பட்டனர்.

இதன் போது தடி அடி நடத்த முற்பட்ட நிலையில், அங்கு குழப்ப நிலை ஏற்பட்டது. இதன் பின்னர் பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார்களின் தலை முடியில் பிடித்து இழுத்து சென்றுள்ளனர்.

அதில் கலந்து கொள்வதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து பேருந்தில் வருகை தந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை மட்டுவில் அம்மன் கோவிலுக்கு அருகில் வழிமறித்த பொலிஸார், வாகனத்தில் இருந்து எவரையும் இறங்க விடாதவாறு, வாகனத்தின் இரு வாசல்களிலும் காவலுக்கு நிற்கும் நிலையில் ஓட்டுநரை கடுமையான விசாரணைக்கு உட்படுத்தி உள்ளனர்.

இதேவேளை, பொலிஸாரின் காவலையும் மீறி பஸ்ஸில் இருந்து இறங்கிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வீதியில் அழுது புரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, மத்திய நிலைய பகுதியில் பெருமளவான பொலிஸார், இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.