மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் யாழ்.போதனா வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பதில் பணிப்பாளர் மு.நந்தகுமார் தொிவித்துள்ளார்.
கண் சத்திர சிகிச்சைகள் நிறுத்தப்பட்டமை தொடர்பாக கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில், கண் சத்திர சிகிச்சைக்கான மருந்துப் பொருட்கள் சிலவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. மேலும் சில மருந்துப் பொருட்கள் குறைந்தளவிலேயே உள்ளது.
இதனாலேயே சத்திர சிகிச்சை பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. என கூறியுள்ளதுடன், மருந்துகளுக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போதைய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது தொடர்பில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன எதிர்க்கட்சி தலைவர் அலுவகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் கீழ் கண்டவாறு சிலவற்றைக் குறிப்பிட்டார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்….
ஒரு புறம் மருந்து விலையேற்றம் அதிகரித்துள்ள நிலையில் மறுபுறம் மருத்து பற்றாக்குறை தீவிரமடைந்துள்ளது.நாட்டில் 250 மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது என அரச மருந்தக கூட்டுத்தாபனம் சுகாதார துறை அமைச்சுக்கு அறிவித்துள்ளது.
வைத்தியசாலைகளில் 55 மருந்து பொருட்கள் தடையில்லாமல் காணப்பட வேண்டும். 3 மருந்து பொருட்கள் உயிர்காக்கும் மருந்துகளாகும், 36 மருந்து பொருட்கள் அத்தியாவசியமானது, மிகுதி மருந்து பொருட்கள் சாதாரண மருந்துகளாகும்.
இந்த 55 மருந்து பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படுமாயின் நாட்டின் சுகாதாரத்துறை முழுமையாக வீழ்ச்சியடைந்து நடுத்தர அதாவது அரச வைத்தியசாலைகளை நம்பியுள்ள பொது மக்கள் பாரிய பாதிப்பினை எதிர்க்கொள்ள நேரிடும் என்றார்.