மிரிஹான சம்பவம்; தலைசுற்றவைக்கும் சொத்து இழப்பு! எவ்வளவு தெரியுமா?

மிரிஹான பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தால் ஏற்பட்டுள்ள சொத்து இழப்பு சுமார் 39 மில்லியன் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

மிரிஹான சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உட்பட 53 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன. அத்துடன் பல குழுக்கள் இதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளதுடன் சிஐடியினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 24 பொலிஸார் காயம் அடைந்துள்ள நிலையில் தேசிய வைத்தியசாலை, களுபோவில மற்றும் பொலிஸ் வைத்தியசாலைகளில் இவர்கள் சிகிச்சைபெற்றுவருகின்றனர். போராடும் உரிமையை பொலிஸார் மதிக்கின்றனர்.

இது தொடர்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. எனினும், அரச சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட சம்பவங்களின்போது பொலிஸாருக்கு அதிகாரத்தை பயன்படுத்த முடியும் எனவும் அவர் கூறினார்.

6 மணி முதல் இரவு 10 மணிவரை அமைதியாக இடம்பெற்ற போராட்டம், 10 மணிக்கு பிறகே மாற்றம் பெற்றுள்ளதாக தெரிவித்த அஜித் ரோஹண , அதுவரை பொலிஸாரும் அமைதியாகவே செயற்பட்டதாகவும், நிலைமையைக் கட்டுப்படுத்தவே குறைந்தபட்ச அதிகாரத்தை பயன்படுத்தியதாகவும் இதன்போது அவர் குறிப்பிட்டார்