கடந்த 20 நாட்களில் 16 கொவிட் நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 27 ஆம் திகதி கொவிட் நோயால் ஒரு மரணம், அந்த மாதம் 23 ஆம் திகதி ஒரு மரணம், மே 01 ஆம் திகதி ஒரு இறப்பு மற்றும் மே 5 ஆம் திகதி மேலும் மூன்று கொவிட் இறப்புகள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
அதிகரித்த உயிரிழப்பு
இதேவேளை, கடந்த 8ஆம் மற்றும் 9ஆம் திகதிகளில் ஒரு மரணமும், 11ஆம் திகதி மேலும் இரண்டு மரணங்களும், 12ஆம் திகதி இரண்டு மரணங்களும், 14ஆம் திகதி ஒரு மரணமும் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அச்சுறுத்தும் மற்றுமொரு நோய்
இதேவேளை, கடந்த வாரம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2055 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் 5 சதவீத அதிகரிப்பு எனவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது.
அதில் 50 சதவீதத்திற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் தரவு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளின் விடுதிகள் டெங்கு நோயாளர்களால் நிரம்பியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, களுத்துறை, குருநாகல், புத்தளம், இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் கடுமையாகப் பரவி வருவதாகவும் அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன.