பேஸ்புக் மூலம் பொருட்கள் கொள்வனவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை

தம்புத்தேகம பிரதேசத்தில் மரப் பொருட்கள் விற்பனைக்கு உள்ளதாக பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட விளம்பரத்திற்கமைய, மரப் பொருட்களை பெற்றுக் கொடுப்பதற்காக பணம் பெற்று பெண் ஒருவர் ஏமாற்றப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் கடந்த 13ஆம் திகதி தம்புத்தேகம பொலிஸ் தலைமையக குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மரப் பொருட்கள் விற்பனை தொடர்பாக பேஸ்புக்கில் வெளியான விளம்பரத்தைப் பார்த்த பெண், விளம்பரத்தை வெளியிட்ட பெண்ணிடம் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு, மரப் பொருட்களின் விலை குறித்து விவாதித்துள்ளார்.

பின்னர், விரும்பிய மர அலமாரி, படுக்கை மற்றும் பல பொருட்களை பெறுவதற்காக, இந்த விளம்பரத்தை வெளியிட்ட பெண் கடந்த 7 நாட்களுக்கு முன்பு தம்புத்தேகம நகரிலுள்ள வங்கியொன்றில் ஒரு லட்சத்து நான்காயிரம் ரூபாவை வைப்பிடுமாறு கூறியுள்ளார்.

அதற்கமைய, பணம் அனுப்பிய பெண் மரப் பொருட்களை எப்போது அனுப்புவீர்கள் என வினவிய போது மரப் பொருட்களின் விலை திடீரென அதிகரித்துள்ளதாகவும் அதனால் மேலும் 20ஆயிரம் வைப்பிடுமாறு கூறியுள்ளார்.

அதற்கமைய, வைப்பிட்டும் பொருட்கள் கிடைக்காதமையினால் பணம் வைப்பிட்ட பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதற்கமைய, அது மோசடி என தெரியவந்துள்ளது. இதனால் பேஸ்புக்கில் உள்ள விளம்பரங்களை பார்த்து ஏமாற வேண்டாம் என பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.