வெளிநாட்டு ஆசையால் யாழில் திருமணத்திற்கு பெண் பார்க்க சென்ற இளைஞனிற்கு நேர்ந்த கதி

திருமணத்திற்கு பெண் பார்க்க சென்ற இளைஞனை நூதன முறையில் ஏமாற்றி 18 இலட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கிளிநொச்சி பளையை சேர்ந்த இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதற்கு பெண் பார்க்க சென்றுள்ளார்.

இளைஞன் பெண் பார்த்து சென்ற சில நாட்களில், இளைஞனின் தொலைபேசிக்கு அழைப்பு ஏற்படுத்திய நபர் ஒருவர், தான் அவுஸ்ரேலியாவில் இருந்து கதைப்பதாகவும், தன்னை இப்பெண்ணின் சகோதரர் என அறிமுகப்படுத்திக்கொண்டு, தனது தங்கை வெளிநாட்டு மாப்பிள்ளையை எதிர்பார்ப்பதாகவும், அதனால் உங்களை நான் வெளிநாட்டுக்கு எடுத்து விட முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார்.

இதற்காக 18 இலட்ச ரூபாய் பணத்தினை இந்த கணக்கு இலக்கத்திற்கு வங்கியில் வைப்பிலிடுங்கள் என ஒரு கணக்கிலக்கத்தை வழங்கியுள்ளார். இளைஞனும் அவரின் பேச்சை நம்பி பணத்தினை வைப்பிலிட்டுள்ளார்.

சில மாதங்கள் கடந்த நிலையிலும் தனது வெளிநாட்டு அலுவல்கள் எதுவும் முன்னெடுக்கப்படாத நிலையில் சுதாகரித்துக்கொண்ட இளைஞன் , அவுஸ்ரேலிய நபருடன் தொடர்பு கொண்டுள்ளார்.

இலட்சங்களில் பணப்பரிமாற்றம்
இந்நிலையில் இருவருக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக சந்தேகநபர் தொடர்பை துண்டித்துள்ளார். அதன் பின்னர் அந்த தொலைபேசி இலக்கமும் செயலிழந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட இளைஞன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகராம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , இளைஞன் தனது பணத்தை வைப்பிலிட்ட கணக்கிலக்க உரிமையாளரான கிளிநொச்சியை சேர்ந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.

குறித்த கணக்கு இலக்கத்திற்கு பல தடவைகள் இலட்சங்களில் பணப்பரிமாற்றம் நடந்துள்ளமை தெரியவந்துள்ளது. அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போது இவ்வாறாக வடமராட்சி பகுதியில் உள்ள இளைஞனையும் ஏமாற்றி வருவது தெரிய வந்துள்ளது.

இதேவேளை மானிப்பாயில் இளைஞன் பெண் பார்க்க சென்ற பெண் , வேறு ஒரு நபரை திருமணம் செய்துள்ள நிலையில் அவரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது , பளை இளைஞன் தன்னை பெண் பார்த்து சென்ற உடனேயே இளைஞனை பிடிக்கவில்லை என கூறி விட்டதாகவும், அதன் பின்னர் தனது சகோதரன் அவரை ஏமாற்றிய விடயம் தனக்கு தெரியாது எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.