மதுபான போத்தல்களில் ஒட்டப்பட்டுள்ள போலி பாதுகாப்பு ஸ்டிக்கர்களை அடையாளம் புதிய திட்டம்

மதுபான போத்தல்களில் ஒட்டப்பட்டுள்ள போலி பாதுகாப்பு ஸ்டிக்கர்களை அடையாளம் காணும் வகையில், தற்போதுள்ள கைபேசி செயலியை மேம்படுத்துமாறு உரிய நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக வழிவகைகள் குழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, சந்தையில் மதுபான போத்தல்களில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களுக்கு முறையான அடையாள அமைப்பு இல்லாததை அவதானித்ததன் காரணமாக கலால் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு ஸ்டிக்கர் உற்பத்தி நிறுவனத்தின் பிரதிநிதி ஆகியோர் முறைகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பான குழுவிற்கு அழைக்கப்பட்டனர்.

விசேட கருவிகள்

இதனைத்தொடர்ந்து, மதுபான போத்தல்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர்களை ஒட்டுவது கட்டாயமாக்கப்பட்டுள்ள போதிலும், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான உற்பத்தியாளர்களும் அறிவுறுத்தல்களை பின்பற்றவில்லை என குழு உறுப்பினர்கள் விசனம் வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், ஸ்டிக்கர்களை பயன்படுத்தாத நான்கு நிறுவனங்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக கலால் திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இந்த போலி ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட மது போத்தல்களை அடையாளம் காண கடந்த மார்ச் மாதம் கலால் திணைக்களத்திற்கு 200 விசேட கருவிகள் வழங்கப்பட்ட போதிலும், இதுவரை இந்த கருவிகள் பயன்படுத்தப்படவில்லை என குழுவில் தெரியவந்துள்ளது.

இம்மாதம் 30ஆம் திகதிக்குள் இந்த உபகரணங்களின் தொழில்நுட்ப மேம்பாட்டை நடைமுறையில் பயன்படுத்தக் கூடிய அளவிற்கு பூர்த்தி செய்யுமாறும், வழிவகைகள் குழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு மேலும் பணிப்புரை விடுத்துள்ளார்.