விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய விதிகள்…!

நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்பு தொடர்பில் நிதியியல் சேவை வழங்குனர்களால் பின்பற்றப்பட வேண்டிய புதிய ஒழுங்கு விதிகள் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 12 மாதகாலத்துக்குள் இந்த புதிய ஒழுங்கு விதிகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்பு ஒழுங்கு விதிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கடந்த 9 ஆம் திகதியன்று இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குபடுத்தப்படுகின்ற அனைத்து நிதியியல் சேவை வழங்குனர்களுக்கும் இவ்வொழுங்குவிதிகள் ஏற்புடையதாக இருக்கும்.

இதனூடாக வங்கித்தொழில் சட்டம், நிதித்தொழில் சட்டம் மற்றும் நிதிக்குத்தகைக்கு விடுதல் சட்டம் என்பவற்றின் பிரகாரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்பு கட்டமைப்புக்கள் மேலும் வலுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சர்வதேச நியமங்கள்
இந்த ஒழுங்கு விதிகள் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக வகுக்கப்பட்டுள்ளன.

ஒழுங்குபடுத்தப்படும் நிதியியல் நிறுவனங்களின் நிதியியல் உற்பத்திகள் மற்றும் சேவைகளைக் கையாளும் தனிநபர்களும் வியாபாரங்களும் மேம்படுத்தப்பட்ட வகையில் நியாயமாகவும், வெளிப்படையான விதத்திலும் நடாத்தப்படுவதுடன் அவர்களது நிதிசார் செயற்பாடுகள் தொடர்பில் மீயுயர் நம்பிக்கையுடன் சிறந்த தீர்மானங்களை மேற்கொள்வதற்கு இயலச்செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட கூறுகளை இவ்வொழுங்குவிதிகள் உள்ளடக்கியுள்ளன.

அதுமாத்திரமன்றி டிஜிட்டல் நிதிச்சேவைகள், வாடிக்கையாளர் தரவுப்பாதுகாப்பு மற்றும் விசேட தேவையுடைய வாடிக்கையாளர்களின் நிதியியல் தேவைப்பாடுகள் என்பன தொடர்பான நவீன நடவடிக்கைகளும் இவ்வொழுங்கு விதிகளில் சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும் மத்திய வங்கியின் பிணக்குத்தீர்த்தல் பொறிமுறைக்கு மாற்றீடாக, குறைநிரப்புச்செய்யப்பட்ட உள்ளக முறைப்பாட்டுக்கையாள்கை பொறிமுறையையும் இந்த ஒழுங்குவிதிகள் பிரேரிக்கின்றன.