சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான தகவல்

அட்டைகள் பற்றாக்குறை மற்றும் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் மோட்டார் போக்குவரத்து துறையில் அச்சிடுவதற்காக குவிந்துள்ள சாரதி அனுமதிப்பத்திரங்களின் எண்ணிக்கை ஒன்பது இலட்சத்தை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் ஓராண்டுக்கு முன் சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிட, அட்டைகளை இறக்குமதி செய்ய முடியாத நிலை இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவுஸ்திரேலியாவிலிருந்து 10 இலட்சம் அட்டைகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

“சிப் கொண்ட ஐந்து இலட்சம் அட்டைகளும், QR குறியீடு கொண்ட ஐந்து இலட்சம் அட்டைகளும் இறக்குமதி செய்யப்பட்டது.

இருந்த போதிலும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வேரஹெர சாரதி அனுமதிப்பத்திர அலுவலகத்தினால் தினசரி அச்சிடப்படும் அட்டைகளின் எண்ணிக்கை இரண்டாயிரமாகும்.

இரண்டு இயந்திரங்கள் மட்டுமே நல்ல நிலையில் உள்ளன. சிப் உள்ள ஐந்து இலட்சம் அட்டைகளும் அச்சடிக்கப்பட்டுள்ளதால் QR குறியீடு கொண்ட அட்டைகளை அச்சடிக்கும் பணி நேற்று முதல் தொடங்கியது.

இம்மாதம் மேலும் மூன்று அச்சு இயந்திரங்கள் பெறப்படவுள்ளதால் அடுத்த மாதம் முதல் நாளொன்றுக்கு ஆறாயிரம் தொடக்கம் ஏழாயிரம் சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்பட உள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இதனால் தற்போது குவிந்து கிடக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் சாரதி அனுமதிப்பத்திரம் ஆறு மாதங்களில் வழங்க எதிர்பார்க்கப்படுவதாக ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

மேலும் தற்போது தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றவர்களின் அனுமதிப்பத்திரம் காலாவதியாகி இருந்தால் சாரதி அனுமதிப்பத்திர அட்டை இன்னும் கிடைக்கவில்லை என்றால் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வேரஹெர அலுவலகம் அல்லது மாவட்ட அலுவலகங்களில் காலத்தை நீட்டிக்க முடியும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.