வைத்தியர் வீட்டில் சிறுமிக்கு சித்திரவதை ; மனைவி கைது!

ஆங்கிலம் கற்பிப்பதாக கூறி இந்தியாவில் இருந்து தரகர் ஒருவரின் உதவியுடன் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ள 17 வயதான சிறுமி ஒருவர், பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆர்.ஏ.டி. மெல் மாவத்தையிலுள்ள இந்திய டாக்டர் ஒருவரின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டு கடும் சித்திரவதைக்குட்படுத்தப்ட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், பொலிஸார் டாக்டரின் மனைவியைக் கைது செய்துள்ளனர்.

இந் நிலையில் கைது செய்யப்பட்ட வைத்தியரின் மனைவியை எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டார்.

அத்துடன் சிறுமியை உடனடியாக சிறுவர் பராமரிப்பு இல்லம் ஊடாக சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர் செய்து அறிக்கை சமர்ப்பிக்கவும் நீதிவான் உத்தரவிட்டார்.

இந்திய வைத்தியரின் மனைவியான சந்தேகநபர் மீனா சுகந்தனுக்கு எதிராக பொலிஸாரால் தண்டனைச் சட்டக் கோவையின் 300 ஆம் அத்தியாயம் மற்றும் 2006 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க பெண்கள், சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல் தொடர்பிலான சட்டத்தின் 20 திருத்த உறுப்புரைக்கு அமைவாகவும்  குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் நீதிவானுக்கு அறிவித்துள்ள விடயங்களின் பிரகாரம்:

கடந்த 19 ஆம் திகதி குறித்த 17 வயதான சிறுமி பம்பலப்பிட்டி  விஷாகா வீதியில் வீடொன்றின் முன்னால் அழுதுகொண்டு இருந்துள்ளார். இது தொடர்பில் அவ்வீட்டின் உரிமையாளர் சிறுமியை விசாரித்து பின்னர் விடயத்தை பம்பலப்பிட்டி பொலிஸாருக்கு அறிவிக்கவே பொலிஸார் சிறுமியை மீட்டுள்ளனர்.

பின்னர் இது தொடர்பில் சிறுமியிடம் பொலிஸார் விசாரித்துள்ளனர்.

இதன்போது தான்  இந்தியாவின் ஜெய்சங்கர் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் 17 வயதான தான் அங்கு கல்வி கற்று வந்த நிலையில் ஆங்கிலம் கற்பித்துத் தருவதாக தான் இங்கு அழைத்து வரப்பட்டதாகவும் சிறுமி கூறியுள்ளார்.

அத்துடன் தனக்கு அம்மா, அப்பா மூன்று சகோதர சகோதரிகள் இருப்பதாக கூறியுள்ள அவர், தனது உறவினர் ஒருவரின் நண்பரான பான்டி என்பவர் ஊடாகவே கொழும்புக்கு அழைத்து வரப்பட்டதாகவும், வந்தது முதல் தனக்கு எந்த கல்வியும் அளிக்கப்படவில்லை எனவும் நான்கு மாடி வீடொன்றில் வேலைக்கு அமர்த்தப்பட்டதாகவும் கூறியுள்ளார். அத்துடன் அவ்வீட்டில் தான் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் வேலை செய்ததமைக்கு எவ்வித கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இந் நிலையிலேயே பம்பலப்பிட்டி பொலிஸார் அச்சிறுமியின் வழி காட்டலில் குறித்த வைத்தியரின் வீட்டை கண்டறிந்து அங்கிருந்த வைத்தியரின் மனைவியை கைது செய்துள்ளனர். அத்துடன்  குறித்த வீட்டை சோதனை செய்த பொலிஸார், குறித்த சிறுமியின் வெட்டப்பட்ட கூந்தல் என சந்தேகிக்கப்ப்டும் கூந்தலை அவ்வீட்டின் குப்பை போடும் பாத்திரத்தில் இருந்து மீட்டுள்ளனர். இந் நிலையிலேயே கைதான வைத்தியரின் மனைவியை பொலிஸார் மன்றில் ஆஜர் செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர்.

இது குறித்த விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like