மரவள்ளி கிழங்கினால் பறிபோன சிறுமியின் உயிர்… மேலும் இருவர் வைத்தியசாலையில்!

தமிழகத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மரவள்ளி கிழங்கு சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த நிலையில் மேலும் 2 குழந்தைகள் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் சிவகங்கையில் உள்ள தமராக்கி கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கிராமத்தில் வன்னிமுத்து – முத்தம்மாள் தம்பதியினருக்கு பிறந்த சுவாதி (13), ஸ்வேதா (12), வனிதா (10) ஆகிய மூன்று பெண் குழந்தைகளே இந்த சம்பவத்திற்கு முகம்கொடுத்துள்ளனர்.

சிறுவர்களின் தாய் முத்தம்மாள் தினக்கூலி வேலைக்கு செல்வது வழக்கம். நேற்று மரவள்ளிக்கிழங்கு அறுவடை வேலைக்கு முத்தம்மாள் சென்றிருந்தார்.

இதனால் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வரும்போது சிறிதளவு மரவள்ளிக் கிழங்கை எடுத்து வந்துள்ளார்.

அதனை குழந்தைகளுக்கு சிப்ஸ் செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் மூவரும் அதை பச்சையாக சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது.

மூவரும் உறங்கச் சென்ற நிலையில், இரவு ஒரு மணித்தியால அளவில் திடீரென 2 குழந்தைகளுக்கும் உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டுள்ளனர்.

அதில் ஸ்வேதா (12) என்ற சிறுமி வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து வனிதா மற்றும் சுவாதியை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.