போக்குவரத்து அதிகாரிகளால் அந்தரங்க உறுப்பை இழந்த இளைஞன்!

மதவாச்சி-விரால்முறிப்பு பகுதியில் போக்குவரத்து பொலிஸாரால் தாக்கப்பட்ட இளைஞன் ஒருவரின் அந்தரங்க உறுப்பை சத்திரசிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டதாக தாக்குதலுக்கு உள்ளான இளைஞனின் தாயார் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 7 ஆம் திகதி காயமடைந்த இளைஞன் மற்றுமொரு நண்பருடன் சிறிய லொறியொன்றில் பயணித்த போது, போக்குவரத்து பொலிஸார் லொறியை நிறுத்தியுள்ளனர்.

குறித்த இளைஞன் லொறியை நிறுத்தாது சென்றதால் துரத்திச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று வாகனத்தை நிறுத்தி அவரையும் அவரது நண்பரையும் கை கால்களை கட்டி வாகனத்தில் வைத்து கொடூரமாக தாக்கியதாக காயமடைந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த இளைஞர் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது தாக்குதலால் இளைஞனின் விதைப்பைகள் பலத்த சேதமடைந்துள்ளதுடன், அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் மூலம் அந்தரங்க உறுப்பு அகற்றப்பட்டதாக தாக்குதலுக்கு உள்ளான இளைஞனின் தாயார் குறிப்பிட்டுள்ளார்.

மதவாச்சி துலாவெல்லிய பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மதவாச்சி பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் இருவர் வேறு பொலிஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.