கண்டி வன்முறை – இதுவரை வெளிவராத திடுக்கிடும் உண்மைகள்!

கடந்த மார்ச் மாதம் இலங்கையின் வரலாற்றில் இன்னுமோர் கறுப்புப்புள்ளியாக பதியப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்றன. நாட்கள் கடந்த நிலையில் இன்று வரை இதன் பின்னணியும் (உண்மையான) சூத்திரதாரியும் அடையாளம் காட்டப்படவில்லை.

உண்மையில் நடந்தது என்ன? எதற்காக இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டது? இதன் பின்னணியில் காய் நகர்த்தியது யார்? போன்ற கேள்விகளுக்கு இன்று வரையிலும் விடையில்லை. ஆனாலும் ஆழ உள்நோக்கும் போது இந்த சம்பவத்தின் பின்னணிகள் தெளிவாகும்.

ஊழல், வெள்ளைவான் கடத்தல், ஊடக அடக்குமுறை, கொலைகள் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளினால் 2015 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவின் அதிகாரங்களை ஐக்கிய தேசிய கட்சி பிடுங்கியது.

சிறுபான்மையினரை முன்நிலைப்படுத்தி அவர்களுடன் நட்புறவைப்பேணும் ஐக்கிய தேசிய கட்சியே இந்த செயலைச் செய்தது என்ற கண்ணோட்டம் அரசியல் அவதானிகள் மத்தியில் இன்றும் காணப்படுகின்றது.

அதற்கு பிரதான காரணம் இன்றுவரையிலும் கண்டி வன்முறைகளுக்கு மஹிந்த தரப்பினரை குற்றம் சுமத்தும் அரசாங்கம் அதன் தண்டிப்புகள், அடையாளப்படுத்தல் எதனையும் மேற்கொள்ளும் சிரத்தையினைக் காட்டவில்லை. இராணுவம் வன்முறைகளுக்கு துணைநின்றதும் அரசாங்கம் மீது பழிசுமத்த முக்கிய காரணம்.

உண்மையில் ராஜபக்ஷ தான் இழந்த அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றிவிடுவார் என்ற அச்சத்தின் காரணமாக நல்லாட்சி எனப்படும் கூட்டுத்தரப்பு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட வன்முறையாகவே இதனை நோக்க வேண்டும்.

காரணம், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் ஏற்படுத்திய மஹிந்த அலை அடங்கும் முன்னரே இந்த வன்முறைகள் இடம்பெற்றன. மஹிந்த தரப்பின் மீது பழி சுமத்துவதற்காக இது மேற்கொள்ளப்பட்டிருக்கலாம்.

அவரின் தேசியவாத அரசியலுக்கு முட்டுக்கட்டை இடவேண்டியது ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய தேவையாகும். பெரும்பான்மையின வாக்குகளை முன்னிலைப்படுத்தி நகரும் மஹிந்தவின் அரசியலை, சிறுபான்மையின வாக்குகளை கொண்டு முடக்க திட்டமிட்ட ஒரு செயலாகவே இந்த வன்முறைச் செயல்கள் காணப்படுவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் சட்ட ஒழுங்கு அமைச்சினை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த பிரதமர் அதனை செவ்வனே செயற்படுத்த தவறிவிட்டார். இதன் காரணமாக அவருடைய வினைத்திறனற்ற செயற்பாடு அவரின் அதிகாரப் பிடியை சற்றே தளர்த்து விட்டது.

எவ்வாறாயினும் ராஜபக்ஷ தரப்பே வன்முறைக்கு காரணம் என அரசு தரப்பு அழுத்திக் கூறினாலும் மக்களால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையே காணப்பட்டது. குறிப்பாக மஹாசோன் என்ற அமைப்பு இந்த வன்முறைகளுடன் தொடர்புபட்டுள்ளதாக கூறப்படுகின்றது. எனினும் அவர்களுடன் பௌத்தமதவாதக் கருத்துகளை செயற்படுத்த அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் இணைந்து செயற்பட்டு வந்துள்ளார் என்பது வெளிப்படுத்தப்படாத இரகசியம்.

அதேபோன்று, கடந்தகால மஹிந்தவின் அரசாங்கம் வீழ்ச்சியடைய முக்கிய காரணியாக விளங்கியது சமூக வலைத்தளங்களே. தற்போதைய நிலையில் ஐ.தே.கவின் பலம் வீழ்ச்சியடையவும் பிரதான காரணமாக அமைந்து வருவது அதே சமூக வலைத்தளங்களே. இது அடுத்த தேர்தலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.

உண்மையில் வன்முறைகள் சமூகவலைத்தளங்கள் ஊடாக வளர்கின்றது என்பதற்காக, வன்முறைகள் இடம்பெற்ற காலப்பகுதியில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டன. ஒரு வகையில் இது உண்மையாக இருந்தபோதும். ஐ.தே.கவின் செயற்பாடுகளினால் ஏற்படும் விமர்சனங்களை தடுப்பதற்காகவும் இந்த சமூக வலைத்தள முடக்கம் மேற்கொள்ளப்பட்டது என்றே கூறப்படுகின்றது.

ஐ.தே.க அடுத்த தேர்தலை முன்னிலைப்படுத்தி மேற்கொண்ட இந்தச் செயற்பாடு பல்வேறு விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புகள் காரணமாக தவிடுபொடியாக்கப்பட்டது என்பதே உண்மை. இல்லாவிடின் இந்த சமூக வலைத்தள முடக்கம் நீண்டிருக்கும் என்றே தென்னிலங்கை புத்திஜுவிகள் தெரிவிக்கின்றனர்.

உதாரணமாக பெப்ரவரி மாதம் புகைவிட ஆரம்பித்த இந்த வன்முறைகள் மிகப்பெரிய அளவிலான கலவரமாக வெடிக்கும் வரை அரசு வேடிக்கைப் பார்த்தது ஏன் என்ற கேள்வி எழுகின்றது.

அரசு நினைக்கும் தருவாயில் அப்போதே இதனைத் தடுத்தி நிறுத்தியிருக்க முடியும் எனினும் அதனை வளரவிட்டு பாரிய பிரச்சினையாக்கியது ஏன் என்ற கேள்வியும் யதார்த்தமானதே. இந்த இடத்தில் அரசு தரப்பிற்கும் இந்த வன்முறைகளுக்கும் தொடர்புகள் இல்லை என்றாலும்கூட அரசினதும், பிரதமரினதும் கையாளாகாதத் தனம் இதன் மூலம் வெளிப்படுத்தப்பட்டு விட்டது என்றே விமர்சனங்கள் எழுந்து நிற்கின்றன.

எவ்வாறாயினும் அடுத்த தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் இந்த கண்டி வன்முறை பிரதான காரணியாக அமையும் என்பதில் எது வித ஐயப்பாடுகளும் இல்லை. மாற்றுத் தரப்பை கைநீட்டும் அரசு கேள்விகளுக்கான விடைகளை அளிக்கத் தயங்கி வருகின்றது என்பதன் மூலம் கண்டி வன்முறையோடு ஆளும் அதிகாரங்கள் தொடர்பு பட்டுள்ளது என்பதே நிறுவப்படுகின்றது.

உதாரணமாக 2014ஆம் ஆண்டு நடைபெற்ற அளுத்கம – பேருவல கலவரத்தில் அப்போதைய ஆட்சியாளர்களின் பங்களிப்பு இருந்த காரணத்தினாலேயே இதுவரையிலும் தண்டிப்புகள் எதுவும் இடம்பெற வில்லை என்பதைப் போல இந்த 2018 வன்முறைகளையும் எடுத்துக் கொள்ள முடியும்.

மறுபக்கத்தில் அரசாங்கத் தரப்பு கண்டி வன்முறைகளோடு தொடர்பு பட்டவர்களை ஆதார பூர்வமாக அம்பலப்படுத்தினால், விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கமுடியும். எனினும் அரசு இதனை செய்யுமா? என்பது இப்போதைக்கு கேள்வி மட்டுமே.

ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது ஆட்சி, அதிகாரத்திற்காக மக்கள் பலிகடாவாக மாற்றப்படும் சூழலே இப்போதும் தொடர்கின்றது எனலாம் அவ்வகையில் இலங்கையில் உண்மையான ஜனநாயகம் அமையப் போவது எப்போது?