வடக்கு மாகாண சபையின் 123ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் இன்று இடம்பெற்றது

2017ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் உரைக்கு குழப்ப விளைவித்த வடக்கு மாகாண திணைக்கள உத்தியோகத்தர், ஊடக அமையத்தின் தலைவராகவே தன்னை சந்தித்து வருகிறார் என வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் சபையில் இன்று தெரிவித்தார்.

வடக்கு மாகாண உத்தியோகத்தர் ஒருவர், ஊடகத்துறையில் பணியாற்றுகிறார் எனவும் அவரே நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றும் போது குழப்பம் விளைவித்து சர்ச்சையை ஏற்படுத்தினார் எனவும் முறைப்பாடுகள் செய்யப்பட்டன.

எனினும் வடக்கு மாகாண உயர் அதிகாரிகள் விசாரணை நடத்துவதாக பெண் அதிகாரி ஒருவர் தலைமையில் குழு அமைத்தனர். அந்தக் குழு முறைப்பாட்டாளர்களை சமாளிக்கும் வகையில் சில விசாரணைகளை முன்னெடுத்ததுடன், இந்த விடயத்தை கிடப்பில் போட்டது.

இந்த நிலையிலேயே வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அந்த உத்தியோகத்தர் யாழ்.ஊடக அமையத்தின் தலைவராகவே தன்னை சந்திப்பார் என்ற விடயத்தை சபையில் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையின் 123ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் இன்று இடம்பெற்றது.

இதில் உரையாற்றிய ஆளும் கட்சி உறுப்பினர் கேசவன் சயந்தன்,

“2017ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் நாட்டின் எதிர்க் கட்சித் தலைவரும் மாகாண சபையின் ஆளும் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் உரையாற்றிய போது, ஒருவர் இடையில் புகுந்து, கேள்வி கேட்கும் நெறிமுறைகள் – தாற்பரியங்களைத் தாண்டி பெரியவர் பேசுகின்ற போது குறுகறுத்துப் பேசுகின்றார்.

அவ்வாறு குழப்பம் விளைவித்தவர் இந்த மாகாண சபையின் கீழ் பணியாற்றும் அரச ஊழியர். மாகாண சபை நடத்துகின்ற ஓர் நிகழ்வில் அவர் ஏன் அவ்விதம் நடந்துகொண்டார் என்ற கேள்வியாவது கேட்கப்பட்டதா?

நான் அறிந்த வரை இது தொடர்பில் பல முறைப்பாடுகள் உரியவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அவ்விதம் செயற்பட்டவர், முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு அடிக்கடி சென்று வருபவராக உள்ளார்.ஆகவே என்ன பின்னணியில் இவை நடக்கின்றன?” என்று கேள்வி எழுப்பினார்.

“அவர் என்ன ஊடக அமையத்தின் தலைவர் என்ற முறையில்தான் சந்திக்கிறவர்” என்று முதலமைச்சர் சிரித்தவாறு பதிலளித்தார்.