யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் ஒருவர் பொலிஸாரால் கைது

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் இளைஞர் ஒருவரை ஏமாற்றி கைபேசியை அபகரித்துச் சென்ற இருவரில் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவரைவரும் 12ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.

யாழ்ப்பாணம் நகரிலுள்ள புடவைக் கடை ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், தனது முதலாளியை அழைத்துக் கொண்டு நேற்று முன்னிரவு அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார்.
முதலாளியின் வீட்டு வாசற்படலையடியில் முதலாளியை இறக்கிவிட்டு நின்ற போது, மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் இருவர், தமக்கு அவரச அழைப்பு ஒன்றை எடுக்க கைபேசியைத் தருமாறு புடவைக் கடை முதலாளியிடம் கேட்டுள்ளனர். அவர் தன்னிடம் கைபேசி இல்லை என்று கூறியதுடன், ஊழியரை கைபேசியை வழங்கி உதவுமாறு கேட்டுள்ளார்.
முதலாளியின் சொல்லைக் கேட்டு ஊழியர் தனது கைபேசியை அந்த இளைஞர்களுக்கு வழங்கியுள்ளார். அதனைப் பெற்ற ஒருவர், அழைப்பு ஒன்றை எடுத்துக் கதைப்பது போன்று பாவனை செய்தவாறு மோட்டார் சைக்களின் பின்னிருகையில் ஏற மற்றயவர் மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்று தப்பித்தனர்.
கைபேசியை பறிகொடுத்தவர் நேற்றிரவே யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். கொள்ளையர்கள் இருவரின் அடையாளங்களையும் அவர் பொலிஸில் தெரிவித்தார்.
துரிதமாகச் செயற்பட்ட யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய சிறுகுற்றப்பிரிவினர், கொள்ளையர்களின் வீட்டுக்கே சென்றனர். யாழ்ப்பாணம் மடம் வீதியிலுள்ள வீட்டில் இருந்த கொள்ளையர் பொலிஸாரைக் கண்டதும் சட்டைப் பையிலிருந்த கைபேசியை எடுத்துக்கொடுத்தார். அதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் இன்று (1) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அவரிடம் மீட்கப்பட்ட கைபேசியும் மன்றில் முன்வைக்கப்பட்டது. மற்றொரு சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் மன்றில் தெரிவித்தனர்.
சந்தேகநபர் மீதான குற்றச்சாட்டை ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் வி.இராமக்கமலன்,  வரும் 12ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.