ஜூன் மாத ராசிப்பலன்கள்.. உங்களுக்கு எப்படி?

இந்த மாதம் உங்க ராசிக்கு எப்படி என்று பார்ப்போம்.

மேஷம்

இந்த காலகட்டத்தில் நீங்கள் பொருளாதாரத்தில் வளர்ச்சி காண்பீர்கள். தெய்வ வழிபாட்டில் நாட்டம் அதிகரிக்கும். நிறுத்தி வைத்திருந்த காரியங்களைச் செய்யத் தொடங்குவீர்கள். சகோதர சகோதரிகளின் குறைகளைப் பெரிது படுத்தமாட்டீர்கள். முன்பு உங்களை ஏமாற்றியவர்களையும் இந்த காலகட்டத்தில் மன்னித்துவிடுவீர்கள். வேலை நிமித்தம் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்த தம்பதி இப்போது சேர்ந்து வாழ சந்தர்ப்பம் உருவாகும். உத்தியோகஸ்தர்கள், உயரதிகாரிகளின் ஆதரவை உறுதுணையாகக் கொண்டு தங்கள் பெரும்பாலான விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். சக பணியாளர்களின் பொறாமைப் பார்வை உங்களைத் துரத்திக் கொண்டே இருக்கும்.

வியாபாரம் லாபகரமாகவே நடைபெறும். நாளுக்குநாள் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்று வியாபாரத்திலும் வளர்ச்சியைக் காண்பீர்கள். கலைத்துறையினர், இடைத்தரகர்களின் உதவியை நாடாமல் நேரடியாகவே முயற்சி செய்தால், புதிய வாய்ப்புகள் சிலவற்றைப் பெற்று மகிழ முடியும். சக கலைஞர்களிடம் சுமுகமாக நடந்து கொண்டு உங்கள் நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். மாணவர்கள், முயற்சித்தால் கல்வியில் நாளுக்கு நாள் முன்னேற்றம் காண முடியும். தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்று உயர்வகுப்புகளுக்குச் செல்லக்கூடும். இடையில் நிறுத்தி வைத்திருந்த சில பகுதிகளுக்கான தேர்வுகளையும் இப்போது எழுதி நிறைவு செய்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு சில சோதனைகள் நேர இடமுண்டு என்றாலும் உறுதியான மனத்துடன் இருந்து பொறுமை காத்து வருவதன் மூலம் தலைமையின் பேரன்பையும், நன்மதிப்பையும் பெறுவீர்கள். உங்களுக்குத் தரப்பட்டுள்ள பணிகளைத் திறமையாக நிறைவேற்றுவதிலேயே உங்கள் நோக்கமெல்லாம் இருந்து வருவது அவசியம். பெண்களுக்கு, குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்கள் எதிபாராத நன்மைகளைப் பெறக் கூடும். தள்ளிப்போய் வந்த திருமணம் திடீரென்று முடிவாகி திருமண வாய்ப்பைச் சிலர் பெறக்கூடும். உடல்நலத்தில் சிறுசிறு உபாதைகள் அடிக்கடி ஏற்படக்கூடிய நிலை உள்ளதால் கவனமாக இருந்து வருவது நல்லது. கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வதன் மூலம் குடும்பத்தில் சில சங்கடங்களைத் தவிர்க்கலாம்.

பரிகாரம்: செவ்வாய்கிழமைதோறும் முருகனை தரிசித்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்.

ரிஷபம்

இந்த காலகட்டத்தில் புதிய வீடுகளுக்கு மாறும் சூழ்நிலை உண்டாகும். பணவரவும் திருப்திகரமான நிலையிலேயே இருக்கும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் ஆழ்ந்த நுண்ணறிவை அனைவரும் பாராட்டுவார்கள். உங்கள் மதிப்பு மரியாதையும் உயரும். செய்தொழிலில் புதிய மாற்றங்களைப் புகுத்துவீர்கள். குடும்பச் சூழலில் இன்பகரமான மாற்றங்களைக் காண்பீர்கள். குழந்தை இல்லாமல் தவித்தவர்களுக்கு மழலை பாக்கியமும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள், அலுவலகம் தொடர்பான விஷயங்களில் முழுமையான திருப்தியைக் காண்பீர்கள். சக பணியாளர்களின் ஒத்துழைப்பும் உயர் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கப்பெற்று மிகுந்த உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.

வியாபாரிகளுக்கு முழுமனநிறைவைப் பெறக்கூடிய வகையில் லாபம் கணிசமான அளவுக்கு உயரும். இருப்பினும் வியாபார ஸ்தலத்தில் உங்கள் நேரடிப் பார்வை இருந்து வருவது அவசியம். இல்லையெனில் போட்டியாளர்களின் பக்கம் உங்கள் வாடிக்கையாளர்களின் பார்வை திரும்பிவிட இடமுண்டு. கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் எளிதில் கிடைக்கக் கூடிய காலகட்டம் என்பதால், பெரும் முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லாமலேயே வாய்ப்புகள் தேடி வரும்.

மாணவர்களுக்கு படிப்பில் மட்டுமில்லாமல் விளையாட்டு போன்ற பிற துறைகளிலும் நீங்கள் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பலரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

அரசியல்துறையினருக்கு உங்கள் தன்னலமற்ற உண்மையான தொண்டின் காரணமாக தலைமையின் பாராட்டுகளையும் நன்மதிப்பையும் பெறுவீர்கள். உங்கள் மன உறுதியும், விசுவாசமும் உங்களுக்குப் பொறுப்பான பதவிகளையும் பெற்றுத்தரும். உங்கள் பொருளாதார அந்தஸ்தும் உயரும். பெண்கள், குறிப்பாக வேலையின் நிமித்தம் வெவ்வேறு ஊர்களில் இருந்தவர்கள் இப்போது சேர்ந்து வாழும் நிலைமை உருவாகும். திருமணம் தள்ளிப்போய் வந்த சிலருக்கு இப்போது திருமண யோகம் கிட்டும். சிலருக்கு மனம் விரும்பியவரையே மாலையிட்டு மணம் முடிக்கும் வாய்ப்பு அமையும். உடல்நிலையில் இருந்து வந்த தேக்கநிலை மாறும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும். பணப் பிரச்னை நீங்கும். உறவினர் மற்றும் நண்பர்களுடன் இருந்து வந்த கருத்து வேற்றுமை மறையும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி.

மிதுனம்

இந்த காலகட்டத்தில் உழைப்பு கூடினாலும் அவற்றுக்கு இரட்டிப்பான வருமானம் கிடைக்கும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். கூட்டாளிகளும் நண்பர்களும் உங்களுக்குப் பாதுகாப்பாக இருப்பார்கள். உங்களைச் சார்ந்திருப்பவர்களையும் உயர்த்தி விடுவீர்கள். வெளிநாடுகளுக்கு உத்தியோகம், கல்வி ஆகியவற்றிற்காகப் பயணம் செய்ய நேரிடும். அதோடு சமூகத்தின் மேல்தட்டு மக்களின் நட்பு கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளின் உதவிகளும் கிடைக்கும் காலகட்டமாகும். உத்தியோகஸ்தர்களுக்கு, உங்கள் பணிகளில் கவனக் குறைவு கூடாது. சக பணியாளர்கள் உங்கள் மீது புகார் எழுப்பத் தயாராயிருப்பார்கள். மறைமுக வருமானங்களில் அதிக எச்சரிக்கை தேவை.

நீங்கள் எதிர்பார்த்தபடி சிலருக்கு இடமாற்றங்கள் கிடைக்கக் கூடுமாயினும் உங்களுக்குத் திருப்திதர முடியாதபடி கடுமையான வேலைப் பளு நிறைந்ததாக இருக்கக் கூடும். உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெற முயன்று செயல்படுவீர்கள். வியாபாரிகளுக்கு வேலையாட்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்து வருவதன் மூலம் விரயங்களைத் தவிர்க்கலாம். வாடிக்கையாளர்களிடம் அதிக அளவில் கடன் நிலுவை இல்லாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் அமைவதற்குரிய சாதகமான சூழல் இருக்கிறது. எல்லாரிடமும் இனிமையாகப் பேசிப் பழகுங்கள். புதிய வாய்ப்புகள் கிட்டும்.

மாணவர்கள் விளையாட்டைக் குறைத்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. விளையாடும்போதும் வாகனப் பயணங்களிலும் கவனம் தேவை. முயற்சிக்கேற்றவாறு மதிப்பெண்களைப் பெறுவர். பெற்றோர்களின் ஆதரவும் நண்பர்களின் உதவியும் கிடைக்கும். அரசியல்துறையினர் எதிலும் எப்போதும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய காலகட்டமாக அமைகிறது. சமூகத்தில் அந்தஸ்தான பதவிகள் கிடைத்தாலும் எதிரிகளின் கை ஓங்கியே காணப்படும். பெண்களுக்கு எதிலும் பொறுமையும், நிதானமும் தேவை. கருவுற்ற பெண்களுக்கு மிகுந்த கவனம் தேவை. கோபத்தைக் குறைத்துக் கொள்வதும் நன்மைகளுக்கு வழிவகுக்கும். யாரிடமும் தேவையில்லாமல் பேச வேண்டாம்.உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு உடற்சோர்வு நீங்கும்.

பரிகாரம்: புதன்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசியை சமர்ப்பி 6 முறை வலம் வரவும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய் தந்தையரின் உடல்நலம் சிறக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.

கடகம்

இந்த காலகட்டத்தில் காரியங்களைத் துணிவாகச் செய்து முடிப்பீர்கள். மேலும் உங்கள் எண்ணங்களை தைரியமாக வெளிப்படுத்துவீர்கள். அவசியமற்ற செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிப்புகளை உயர்த்திக் கொள்வீர்கள். தன்னம்பிக்கையுடன் காரிய மாற்றுவீர்கள். புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும். உங்கள் நிர்வாக ஆற்றல் அதிகரிக்கும். சமூகத்தில் உயர்ந்தவர்களின் நட்பு தானாகவே கிடைக்கும். சுறுசுறுப்புடன் இயங்குவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் போக்கில் மிகத் திருப்திகரமான பலன்கள் ஏற்பட வாய்பில்லை என்றாலும் பெரும் சங்கடங்கள் எதுவும் ஏற்பட்டு விடவும் வாய்ப்பில்லை என்ற அளவில் ஆறுதலடையலாம்.

வியாபாரிகளுக்கு பெரும் முன்னெற்றம் இருக்கும். பணம் புழங்கும் இடங்களில் உங்களுக்கு நம்பிக்கையுள்ளவர்களையே அமர்த்துவது மிக முக்கியமாகும். உங்கள் நேரடி கவனமும் அடிக்கடி இருந்து வருவது நல்லது. போட்டி நிறுவனங்களின் எதிர்ப்புகள் பலமாகவே இருக்குமாயினும் உங்கள் சமயோசித புத்தியினால் சமாளிப்பது நல்லது. கலைத்துறையினருக்கு உங்கள் தொடர்ச்சியான முயற்சிகளால் மட்டுமே புதிய வாய்ப்புகளைப் பெறமுடியும் என்ற நிலை இருக்கிறது. பிறரை நம்பாமல் நீங்களே நேரிடையாகப் பார்க்க வேண்டியவர்களை பார்த்து பேசுவதுதான் உங்களுக்கு வெற்றி தரக்கூடும்.

மாணவர்களுக்கு விளையாட்டு போன்ற துறைகளில் ஆர்வம் இருக்குமாயினும் படிப்பில் அதிக அக்கறை செலுத்துவது அவசியம். அரசின் கல்விச் சலுகைகள் கிடைப்பதில் சிரமங்கள் ஏற்படக்கூடும். சிலர் மேற்படிப்பை தொடர முடியாமல் வேலை வாய்ப்புகளைத் தேடவும் முயல்வீர்கள். அரசியல் துறையினர், தரப்பட்டுள்ள பொறுப்புகளைத் திறம்பட நிறைவேற்றி தலைமையின் பாராட்டுகளைப் பெறுவது இப்போதைய நிலையில் மிகக் கடினமாக இருக்கக் கூடும். பொறுமையாக இருந்து உங்கள் பணிகளைப் பழுதில்லாமல் செய்து தலைமையின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். பெண்களுக்கு இதுவரை பல காரணங்களால் தள்ளிப்போய் வந்த திருமணம் நிறைவேற வாய்ப்புண்டு. மறைமுக சேமிப்புகளில் ஓரளவு பணம் சேரும். பூர்வீகச் சொத்து மூலம் சிலருக்கு தனவரவு ஏற்படக்கூடும். உடல்நலத்தில் மிக அதிக கவனம் செலுத்துவது அவசியம். முக்கியமாக வயிறு மற்றும் செரிமானம் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படலாம்.

பரிகாரம்: துர்க்கை அம்மன் வழிபாடு எல்லா துன்பங்களையும் போக்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வியாழன்.

சிம்மம்

இந்த காலகட்டத்தில் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பணம் எதிர்பார்த்த அளவுக்கு வந்து கொண்டிருக்கும். உங்கள் முயற்சிகளைச் செம்மைப்படுத்தி காரியங்களை ஆற்றி வெற்றி பெறுவீர்கள். புதிய சேமிப்புத் திட்டங்களிலும் ஈடுபடுவீர்கள். சிலர் புதிய வீடு வாங்கி கிரகப் பிரவேசம் செய்வார்கள். உங்களின் அசாத்திய துணிச்சலால் செயற்கரிய சாதனைகளைச் செய்வீர்கள். மறக்க முடியாத விதத்தில் அரசு வழியில் சில சலுகைகள் கிடைக்கும். முக்கியமானவர்களுடன் பேசும்போது உங்கள் அறிவாற்றலை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவோடு, எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு போன்றவை ஏற்படும். சிலர் விருப்ப ஓய்வின் மூலம் உத்தியோகத்திலிருந்து விலகி தொழிலிலோ, வியாபாரத்திலோ ஈடுபட முனையக்கூடும்.

வியாபாரிகளுக்கு, வாடிக்கையாளர்களின் ஆதரவு தொடர்ந்து நல்லமுறையில் இருந்து வரும். நீங்கள் தரமான பொருட்களை விநியோகம் செய்து வருவதன் காரணமாக புதிய வாடிக்கையாளர்களும் உங்களை நாடி வருவார்கள். கலைத்துறையினர் வாய்ப்புகளைத் தேடி பலரைச் சந்திக்கச் சென்ற நிலை மாறி வாய்ப்பு தானாகவே தேடி வரும். உங்கள் பெருமையும், புகழும் நாடெங்கும் நன்கு பரவும். மாணவர்கள் கல்வியில் அதிக மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கல்விச் சலுகைகள் பெறக்கூடிய வாய்ப்பு உண்டு. விளையாட்டு, போட்டிகள் போன்றவற்றிலும் பரிசுகளைப் பெற்று மகிழ்வீர்கள்.

அரசியல்துறையினரின் தன்னலமற்ற தொண்டுக்குப் பாராட்டுகள் குவியும். தலைமையின் நன்மதிப்பையும் தொண்டர்களின் பெரும் ஆதரவையும் பெறுவீர்கள். உங்கள் செல்வாக்கும் சொல்வாக்கும் அதிகரிக்கும். பெண்கள் வீட்டுக்குத் தேவையான நவ நாகரீகப் பொருட்களை வாங்கி வீட்டை அழகுபடுத்துவீர்கள். புத்திர வழியில் மகிழ்ச்சி வரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை, உறவினர் வருகை எல்லாம் உங்கள் மகிழ்ச்சியைப் பெருக்கும் வகையில் அமையும். உடல் உபாதைகளை அலட்சியப்படுத்தினால் பெரிய மருத்துவச் செலவுகள் செய்யுமாறு நேரிடலாம்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைதோறும் சிவன் கோயிலை 11 முறை வலம் வரவும். பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரை வணங்குவதும் வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும். சமூகத்தில் அந்தஸ்து அதிகாரம் கிடைக்கப் பெறும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்.

கன்னி

இந்த காலகட்டத்தில் குடும்பத்தில் பிள்ளை இல்லாதோருக்குப் புத்திர பாக்கியம் ஏற்படும். குடும்பத்திலும் வெளியிலும் உங்கள் செல்வாக்கு உயரும். பாகப்பிரிவினை போன்றவை சுமுகமாக முடியும். வருமானம் சிறப்பாக அமையும். மனதிலிருந்த அழுத்தங்கள் விலகித் தெளிவான சிந்தனையில் இருப்பீர்கள். வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். சமூகத்தில் உயர்ந்தோரின் நட்பும் ஆதரவும் கிடைக்கும். அனுபவத்தின் மூலம் நிரந்தரமான முடிவை எடுப்பீர்கள். ஆன்மீகத்திலும், தர்ம காரியங்களிலும் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெற சற்று அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். சக பணியாளர்களிடம் சுமுகமாக பழகுவீர்கள்.

எதிர்பாராத இடமாற்றம் உண்டு. பொருளாதார நிலை முன்னேறும். உங்கள் பணிகளில் தைரியமாகவும், பொறுமையாகவும் செயல்பட்டு நன்மதிப்பைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் இருக்கும். வாடிக்கையாளர்களின் தேவைக்காக புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியில் உள்ள கடன் தொகைகள் வசூலாகும். கொள்முதலில் கவனம் தேவை. ஒன்றுக்கு இரண்டு முறை விசாரித்து கொள்முதலில் ஈடுபடவும். கலைத்துறையினருக்கு பல முயற்சிக்குப் பிறகு புதிய வாய்ப்புகள் தேடி வரும். சக கலைஞர்களின் போட்டி உங்கள் வாய்ப்புகளுக்கு சவாலாக இருக்கும். வரும் வாய்ப்புகள் உங்கள் பெயரை பிரபலப்படுத்தும். மாணவர்கள் படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது.

சிறு உடல் உபாதைகள் வரலாம். உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் முயற்சிகள் சில தடங்கல்களுக்குப் பிறகு நிறைவேறும். அரசியல்துறையினருக்கு தேவையற்ற வீண் சோதனைகள் வரலாம். உங்களைப் பாராட்டியவர்களே இப்போது தரக்குறைவாக பேசலாம். மாற்று முகாம்களை சேர்ந்தவர்கள் உங்களை நாடி வருவார்கள். பெண்களுக்கு அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உங்கள் விஷயத்தில் மூன்றாவது நபர் தலையீடு இருக்காமல் பார்த்துக் கொள்ளவும். உடல் நலத்தில் மிக அதிக கவனம் செலுத்தவும். மாத்திரைகள் சரியான நேரத்தில் உட்கொள்ளவும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் ஐயப்பன் ஆலயத்திற்கு சென்று வணங்குவது பாவங்களை போக்கும். சிக்கலான பிரச்னைகள் தீரும். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்.

துலாம்

இந்த காலகட்டத்தில் ராசியிலிருக்கக்கூடிய குருவால் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். சுபச்செலவுகள் உண்டாகும். பலவகையிலும் முயன்று வருமானத்தை ஈட்டுவீர்கள். குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். சிலர் சொந்த வீடு வாங்குவார்கள். பொறுப்புகளை எவ்வளவு விரைவில் முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் முடித்து விடுவீர்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு கொள்வீர்கள். பயணங்கள் மேற்கொண்டு புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்களைத் தேடி நல்ல செய்திகள் வந்து கொண்டிருக்கும். அரசாங்கத்தின் கெடுபிடிகளும் குறையும். சமுதாயத்தில் உயர்ந்தோரை நாடிச் சென்று அவர்களின் ஆலோசனைகளால் பயனடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பும் இடமாற்றம் கிடைக்கும். ஆனால் மேலிடத்துடன் இணக்கமாக செல்வது நல்லது. சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்கள் மீது மற்றவர்கள் வீண் குற்றச்சாட்டு சுமத்த நேரலாம். பணி நிமித்தமாக அடிக்கடி பிரயாணங்கள் ஏற்படும். தொழில் துறையினருக்கு சக போட்டியாளர்கள் மூலம் தேவையற்ற வீண் மன உளைச்சல் ஏற்படலாம். உங்களிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களிடம் கனிவான உறவை கடைப்பிடிப்பது நல்லது. கலைத்துறையினர், கிடைக்கும் சிறு வாய்ப்புகளைக் கூட வீணாக்காமல் பயன்படுத்துவது நல்லது. உங்கள் திறமைகளை வெளிக்கொண்டுவர சிறந்த காலகட்டம் இதுவாகும்.

பாராட்டு, புகழ், விருது உங்களைத் தேடி வரும். மாணவர்களுக்கு கல்வியில் சிறிது ஆர்வக் குறைவு ஏற்படலாம். மனதை நிலையாக்கிக் கொள்ளவும். விளையாட்டில் சாதனைகளை படைப்பீர்கள். அதிக மதிப்பெண்கள் எடுப்பதற்கு அதிகமான முயற்சி தேவை. சோம்பல் கூடவே கூடாது. அரசியல்வாதிகள் மீது தலைமை அதிகமான நம்பிக்கை கொள்ளும். உங்கள் நண்பர்களே உங்களுக்கு எதிராக செயல்படலாம். உங்களுடைய விசுவாசத்திற்கு மேலிடம் உங்களுக்கு சரியான பதவிகளை அளிக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் கலகலப்பு அதிகரிக்கும். அனைவரிடமும் கனிவாக நடந்து கொள்வது சிறந்தது. கருவுற்றிருக்கும் பெண்கள் நிதானமாக இருப்பது அவசியம். உடல்நலத்தைப் பேணுவதில் அதிக சிரத்தை அவசியம்.

பரிகாரம்: குலதெய்வத்தை தினமும் வணங்கிவர எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி.

விருச்சிகம்

இந்த காலகட்டத்தில் உங்களுக்கு உதவி செய்திட பலரும் முன்வருவார்கள். மனதை அரித்துக் கொண்டிருந்த பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு தெரியும். புதிய முயற்சிகளும் ஓரளவுக்குக் கை கொடுக்கும். உங்கள் செயல்களுக்குப் புதிய அங்கீகாரம் கிடைக்கும். திருமணப் பிரச்னை, குடும்பப் பிரச்னை ஏற்பட்டாலும் முடிவு சாதகமாக இருக்கும். குடும்பப் பிரச்னைகளில் மூன்றாம் மனிதர் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். உத்தியோகஸ்தர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். இதுவரை குடும்பத்தை விட்டுப் பிரிந்து இருந்த சிலர் இப்போது குடும்பத்துடன் சேரும் வாய்ப்பு கிடைக்கும். சக பணியாளர்களின் நட்புறவு உங்கள் பணிகளைக் குறைக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

வியாபாரிகள் கடின முயற்சியால் வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். புதிய கிளைகள் திறப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். ஜவுளி வியாபாரிகள் கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள். வசூல் செய்வதில் சிறிது கவனத்துடன் இருப்பது அவசியம். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார நிலை உயர்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். சக கலைஞர்களிடம் பகைமை இன்றி சுமுகமாகப் பழகி வருவது அவசியம். சிலருக்கு விருதுகள் கிடைக்கும். சேமிப்புகளில் கவனம் செலுத்துவீர்கள். மாணவர்களுக்கு படிப்பார்வம் நாளுக்கு நாள் முன்னேற்றமடையும். கல்வி நிலையங்களில் சக மாணவர்களிடம் சண்டையிடுவதை தவிர்ப்பது நலம்.

விளையாட்டு மற்றும் பிற விஷயங்களில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். அரசியல்துறையினர், உங்கள் பொறுப்பான பணிகளுக்காக தலைமையின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். மேலும் அவர்களின் தனிப்பட்ட அபிமானத்தையும் பெற்று மகிழ்வீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டு. பெண்களே, குடும்ப முன்னேற்றத்தில் உங்கள் சாமர்த்தியமான போக்கு பெரிதும் பயன்படும். தாமதமாகி வந்த சிலரின் திருமணம் இப்போது முடியும். ஆன்மிகப் பயணம் மேற்கொள்வீர்கள். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு. உடல்நலத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு முன்னேற்றம் ஏற்படும். உணவில் காரத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.

பரிகாரம்: துர்க்கை அம்மனை செவ்வாய்கிழமைகளில் பூஜை செய்து வழிபட எதிர்ப்புகள் நீங்கும். தைரியம் கூடும். பணவரத்து மிகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி.

தனுசு

இந்த காலகட்டத்தில் முக்கிய திருப்பங்களைக் காணப்போகிறீர்கள். திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். தாய்வழி ஆதரவு பெருகும். இல்லத்திற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வம்பு வழக்குகளிலும் வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் வளர்ச்சி உண்டாகத் தொடங்கும். திடீரென்று வெளிநாடுகளுக்குப் பயணப்பட விசா கிடைக்கும். பொது வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புகழும் செல்வாக்கும் கூடும். உங்களின் நம்பிக்கைகள் வீண் போகாது. உத்தியோகஸ்தர்கள் சிறப்பான பலன்களைப் பெறப் போகிறீர்கள். உங்கள் பணிகளில் அதிக சிரத்தையும் முயற்சியும் தேவை. யாரும் உங்களை குறை கூறாத அளவிற்கு நேரத்தை கடைப்பிடிப்பது நல்லது. சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரிகளுக்கு குறைந்தபட்சம் லாபம் உறுதியாகக் கிடைக்கும்.

போட்டிகள் அதிகமாக இருந்தாலும் வாடிக்கையாளர்களின் ஆதரவால் உங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும். உங்கள் பணியாளர்களைத் தொடர்ந்து கண்காணிப்பது நன்மை தரும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கொட்டும். அதன் மூலம் உங்களது பொருளாதார நிலை உயரும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது ஆவணங்களை சரியாக படித்துப் பார்ப்பது நல்லது. மாணவர்களுக்கு ஜென்ம சனியில் இருப்பதால் படிப்பில் ஆர்வம் குறையலாம். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வது நல்லது. விளையாட்டில் ஈடுபடும் போது கவனமாக இருப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல்களை குறைத்துக் கொள்வது நன்மை தரும்.

அரசியல்துறையினருக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து விரும்பிய உதவிகள் கிடைக்கும். மனஉற்சாகத்துடன் கட்சி பிரசாரங்களில் பங்கேற்பீர்கள். வழக்குகளும் முடிவுக்கு வரும். மேலும் அதிகாரம் மிக்க பதவிகளும் தேடி வரும். வெற்றி தரும்படியான பயணங்களை மேற்கொள்வர். பெண்மணிகளுக்கு அனைத்து காரியங்களும் சுமுகமாக முடிவடையும். குடும்பத்தாரின் நல்லெண்ணங்களுக்குப் பாத்திரமாவீர்கள். கணவரிடம் நல்ல உறவு அமையும். ஆன்மிகத்திலும் நாட்டம் அதிகரிக்கும். உடல்நலத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்படலாம். வண்டி வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை.

பரிகாரம்: ராகு-கேதுவுக்கு பரிகார பூஜை செய்வதும் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவதும் கஷ்டங்களை போக்கி மனதில் நிம்மதியை தரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்.

மகரம்

இந்த காலகட்டத்தில் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெறுவீர்கள். உற்றார் உறவினர்கள் உங்கள் உயர்வைக்கண்டு ஆச்சரியப்படுவார்கள். வருமானம் சீராக வந்து கொண்டிருந்தாலும் சில விரயங்களும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். பிள்ளைகளின் நலனுக்காகவும் சிறிது செலவு செய்ய நேரிடும். சமூகத்தில் உங்கள் பெயர் கௌரவம் கூடும். இழப்புகளை ஈடு செய்யும் அளவுக்கு புதிய புதிய வாய்ப்புகளும் தேடி வந்து கொண்டிருக்கும். உங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களையும் உன்னிப்பாக கவனித்து அதற்கேற்ப உங்கள் செயல் திட்டங்களை மாற்றி அமைத்து வெற்றி பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் நீண்டகால விருப்பங்களெல்லாம் எளிதாகக் கிடைக்கப் பெற்று உடலும் உள்ளமும் உற்சாகமடைவீர்கள். உயர் அதிகாரிகளின் முழுமையான ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். உங்கள் பொருளாதார நிலை பெருமளவில் உயரும். சேமிப்பு பெருகுவதால் வீடு, மனை, வாகன வசதிகளைப் பெற்று மகிழ்வீர்கள். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவு பெருகி வருவதன் மூலம் வியாபாரத்தில் முன்னேற்றமான போக்கும், திருப்திகரமான லாபமும் உண்டாகும். பொருளாதார முன்னேற்றம் காரணமாக சேமிப்புகளிலும், அசையா சொத்துகளிலும் முதலீடு செய்வீர்கள். கலைத்துறையினருக்கு புதிய புதிய வாய்ப்புகள் தேடிவரும். வாய்ப்பு தேடி நீங்கள் பெருமளவில் அலைந்த நிலைமாறி, உங்களைத் தேடி பலர் வரும் நிலை ஏற்படும்.

அதற்கேற்ற முறையில் உங்கள் தகுதிகளைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு. மாணவர்கள் கல்வித்துறையில் சாதனை படைத்தவர்களாகச் சிறப்பிடம் பெற்று விளங்குவீர்கள். அரசு மற்றும் பொது சமூகநல அமைப்புகள் வழங்கும் கல்விச் சலுகைகள் உங்களுக்குக் கிடைத்து பெருமையும் புகழும் அடைவீர்கள். பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டுகளையும் பெற்று மகிழ்வீர்கள். அரசியல்துறையினருக்கு செல்வாக்கு நாளுக்கு நாள் பெருகி வரும் உங்கள் தன்னலமற்ற பணிகளின் தன்மைகளைப் புரிந்து கொண்டு உங்களுக்குச் சிறப்பான பதவிகளை அளிக்க தலைமை முன்வரக்கூடும். பெண்களுக்கு குடும்பத்தில் அமைதி ஏற்படும். உங்கள் சொல்வன்மை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை ஒவ்வாமை சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படலாம்.

பரிகாரம்: பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்க வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி.

கும்பம்

இந்த காலகட்டத்தில் உங்கள் காரியங்களில் கூடுதல் அக்கறை காட்டுவீர்கள். சந்தேகத்துக்கு இடமான விஷயங்களை ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்படுத்துவீர்கள். மற்றவர்கள் உங்கள் பேச்சைத் திரித்து புரிந்து கொள்ள வாய்ப்புள்ளதால், வெளியில் பேசும்போது வார்த்தைகளை அளந்து பேசவும். நெடுநாளாக விலை போகாதிருந்த சொத்துகள் சிறிய தாமதத்துக்குப் பிறகே விற்பனையாகும். வழக்குகளிலும் தீர்ப்பு வர தாமதமாகும். தேவையற்ற வாய்தாக்களும் உங்களை வருத்தமடையவே செய்யும். வாழ்க்கையில் நல்லது எது கெட்டது எது என்பதை அறிந்து கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் எவ்வளவுதான் முயன்றாலும் உங்கள் முயற்சிகளில் தடங்கல், தாமதங்களைத் தவிர்க்க முடியாது.

உயர் அதிகாரிகளின் கண்டனங்களுக்கு ஆளாகாமல் தப்ப, உங்கள் பணிகளில் கண்ணும் கருத்துமாக இருந்து வர வேண்டும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் இருக்காது. எனவே சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது நன்மை தரும். கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது.வேலையாட்களிடம் அனுசரணையாக நடந்து கொள்வதன் மூலம் நஷ்டங்களைத் தவிர்த்து பொருளாதார நெருக்கடி வராமல் காக்கலாம். கலைத்துறையினர் முயற்சி செய்தால் பல புதிய வாய்ப்புகளைப் பெறலாம். உங்களால் நேரடியாக செய்து முடிக்கக் கூடியவற்றை நீங்களாகவே செய்வது எதிர்கால குழப்பத்திலிருந்து உங்களைக் காப்பாற்றும். மாணவர்கள் ஒருமுறைக்குப் பலமுறை பாடங்களை படித்தல் நல்லது.

விளையாட்டுகளில் கவனத்தைக் குறைத்து, பாடங்களில் கவனத்தை செலுத்தி படிப்பில் மேன்மை அடையலாம். அரசியல்வாதிகள் தங்களின் பணிகளில் கவனம் செலுத்துவது நன்மை தரும். மேலிடத்தில் உங்களைப் பற்றி அவதூறு கூறுபவர்கள் உங்களுடனே இருப்பார்கள், எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள். பெண்களைப் பொறுத்தவரை குடும்பத்தில் சிறு குழப்பங்கள் ஏற்பட்டாலும் அவை தானாகவே நிவர்த்தியாகிவிடும். கோபத்தைக் குறைப்பதன் மூலம் சிக்கல்கள் தீரும். வேலைக்குப் போகும் பெண்கள் சரியான நேரத்தைக் கடைபிடிப்பது அவசியம். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு தொல்லைகள் வந்தாலும், மருத்துவச் சிகிச்சையால் அனைத்தும் சரியாகிவிடும்.

பரிகாரம்: பகவத்கீதை படித்து ஸ்ரீகிருஷ்ணனை வணங்கி வர எல்லா பிரச்சனைகளும் தீரும். மன மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.

மீனம்

இந்த காலகட்டத்தில் நண்பர்கள் ஓடிவந்து உதவி செய்வார்கள். செய்தொழிலில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். பொருளாதாரம் சிறப்பாக அமையும். பங்கு வர்த்தகத்திலும் லாபம் கிடைக்கும். விரக்தி மனப்பான்மையை விட்டொழித்துவிட்டு நம்பிக்கை சின்னமாகக் காட்சியளிப்பீர்கள். மகிழ்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் உழைப்பீர்கள். ஆலய திருப்பணிகளுக்கு செலவு செய்து புகழடைவீர்கள். மனதிலும் வைராக்கியம் கூடும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். வெளியூர் வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். சகபணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள்.

எதிர்பாராத வருமானம் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வேலை நிமித்தமாக வெளியூர்களில் தங்கியிருந்தவர்கள் குடும்பத்துடன் சேரும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகளுக்கு சிறப்பான முன்னேற்றம் காணப்படும். போட்டியாளர்களால் உங்கள் வாடிக்கையாளர்களைத் தங்கள் வசம் ஈர்க்க முடியாது. அதேபோல் நீங்களும் வாடிக்கையாளர்களைத் திருப்திபடுத்துவது நல்லது. கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் காணப்படும். உங்கள் வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். புது வாகன வசதிகள் அமையக்கூடும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். அதன் மூலம் நன்மதிப்பைப் பெறுவீர்கள். பெற்றோர் ஆசிரியர் மட்டுமின்றி அனைவரும் பாராட்டும் அளவிற்கு நீங்கள் நடந்து கொள்வீர்கள்.

சிலருக்கு வேலை வாய்ப்பும் படிக்கும் போதே அமையும். அரசியல்வாதிகளுக்கு பலரும் பொறாமைப்படும் அளவிற்கு வளர்ச்சி இருக்கும். மேலிடத்திலிருந்து முழு ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள் சொல்லுக்கு தனிப்பட்ட மரியாதை கிடைக்கும். பொருளாதார நிலையிலும் திருப்திகரமான முன்னேற்றம் காணப்படும். பெண்களுக்கு குடும்பத்தில் குதூகலம் நிரம்பிக் காணப்படும். குடும்பத்தினரின் அன்பையும், நன்மதிப்பையும் குறைவரப் பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள். வேலைக்குப் போகும் பெண்கள் ஊதிய உயர்வு கிடைக்கப்பெறுவீர்கள். சிலருக்கு திடீர் திருமண வாய்ப்பும் கிடைக்கப் பெறும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு உண்டு.

பரிகாரம்: சஷ்டிதோறும் முருகனுக்கு பாலபிஷேகம் செய்வது நன்மை பயக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like