வவுனியாவில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை : ஒருவர் கைது!!

வவுனியா ஓமந்தை பாலமோட்டைப் பகுதியில் இன்று (09.06.2018) காலை 9 மணியளவில் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையில் கீழ் செயற்படும் புலனாய்வுப் பிரிவினரால் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் கசிப்பு உற்பத்திக்குப் பயன்படும் 1500 லீற்றர் கோடாவுடன் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிலுள்ள பாலமோட்டை, ஊறாகுளம் பகுதியில் சட்ட விரோதமாக கசிப்பு உற்பத்தி நிலையம் செயற்படுவதாக வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் தலைமையின் கீழ் செயற்படும் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவல் அடிப்படையில்,

பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் போதை ஒழிப்புப்பிரிவினருடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் அப்பகுதியைச் சுற்றி வளைத்து முற்றுகையிட்ட பொலிசார் கசிப்பு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் ஒரு பரல் 1500 லீற்றர் கொண்ட கோடாவினையும் அப்பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.