அதிசயப் பூனை அக்கிலெஸின் – கணிப்பு பலித்தது!!

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. முதல் போட்டியில் சவுதி அரேபியா – ரஷ்யா அணிகள் மோதிக்கொண்டன. இதில் ரஷ்யா அணிதான் வெற்றிபெறும் என்று கணித்தது அக்கிலெஸ் என்கிற பூனை. அந்த அதிசயப் பூனை கணித்ததைப் போலவே ரஷ்ய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

2010- ஆம் ஆண்டு உலகக் கோப்பையின்போது நடைபெற்ற 14 போட்டிகளில் 12 போட்டிகளைச் சரியாகக் கணித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்தது பால் ஆக்டோபஸ். அதேபோல இந்த ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளைக் கணிக்க அக்கிலெஸ் என்கிற பூனை களமிறக்கப்பட்டுள்ளது.

இந்த அக்கிலெஸ் பூனை கடந்த ஆண்டு நடைபெற்ற ஃபிஃபா கான்ஃபெடரேஷன் கோப்பையில் நடந்த போட்டிகளின் வெற்றியாளர்களை சரியாகத் தேர்வு செய்துள்ளது. அதில் ஒரு போட்டி டிராவில் முடியும் என்பதைச் சரியாகக் கண்டுபிடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஃபிஃபா கான்ஃபெடரேஷன் கோப்பையில் வெற்றிகண்ட உற்சாகத்துடன் களமிறக்கப்பட்ட அக்கிலெஸ் பூனையின் முன்பு ரஷ்யா மற்றும் சவுதி அரேபியா ஆகிய இரு அணிகளின் கொடிகளைக் கொண்ட இரண்டு உணவுக் கிண்ணங்கள் வைக்கப்பட்டன.

அதில் ரஷ்யா கொடி கொண்ட உணவுக் கிண்ணத்திலுள்ள உணவை அருந்தியது அக்கிலெஸ். எனவே, ரஷ்ய அணிதான் வெற்றிபெறும் என்றனர் அக்கிலெஸின் பாதுகாப்பாளர்கள். அதேபோல நேற்று நடந்த போட்டியில் சவுதி அணியை 5-0 என்ற கணக்கில் தோற்கடித்து அபார வெற்றிபெற்றது ரஷ்யா அணி.

பால் அக்டோபஸுக்குப் பிறகு சில விலங்குகள் உலகக் கோப்பை கணிப்பில் ஈடுபட்டது. ஆனால், அவை அனைத்தும் ஓரிரு போட்டிகளைத் தவிர மற்ற போட்டிகளைத் தவறாகவே கணித்தன. இனி வரும் போட்டிகளில் அக்கிலெஸ் சரியாகக் கணிக்குமா, பால் ஆக்டோபஸின் ரெக்கார்டை முறியடிக்குமா என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.