மன்னார் கருஸல் புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தில் தாக்குதல்- சிறுமி காயம்

மன்னார் கருஸல் புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தில் திருப்பலி இடம்பெற்றுக்கொண்டிருந்த போது இனந்தெரியாத விசமிகளினால் கல்வீச்சுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கருஸல் புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை திருப்பலி இடம் பெற்றுக்கொண்டிருந்த போது, காலை 9 மணியளவில் ஆலயத்தின் மீது பாரிய கல் ஒன்றினால் இனந்தெரியாத விசமிகளினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஆலயத்தின் ஓடு உடைந்து, பாரிய கல்லொன்று ஆலயத்தினுள் விழுந்ததில் திருப்பலியில் கலந்து கொண்டிருந்த சிறுமி ஒருவர் காயமடைந்தார்.

கல் வீச்சுத் தாக்குதல் சம்பவம் குறித்து உடனடியாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன், குறித்த ஆலயத்திற்கு வருகை தந்த மன்னார் பொலிஸார் சேதமடைந்த பகுதியை பார்வையிட்டனர்.

குறித்த கல்வீச்சுத் தாக்குதல் குறித்து அப்பகுதியில் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கு முன்னர் கருஸல் புனித கப்பலேந்தி ஆலயத்தில் மீது பல தடவைகள் இனந்தெரியாத விசமிகளினால் கல் வீச்சுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில், மன்னார் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது பலர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.