யாழில் மாணவிகளைச் சீரழித்த காமுக ஆசிரியர் சட்டத்தின் பிடியிலிருந்து நழுவுகிறாரா? (Photos)

வட்டுக்கோட்டை ஆசிரியர், தனியார் கல்வி நிலையத்துக்கு வந்த மாணவிகளை வன்புணர்வுக்குட்படுத்தவில்லை, பாலியல் ரீதியான தொல்லைகளையே வழங்கினார் என்ற ரீதியில் மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. அதனால் அது பாரதூரமான குற்றச்சாட்டு இல்லை என்ற கருத்து தற்போது சட்டத்துறை சார்ந்தவர்களாலும் ஆசிரியர் சார்ந்த தரப்புகளாலும் புதிய கதை ஒன்று பரப்பப்பட்டுள்ளது.

கல்வி பயிலவரும் மாணவியை – சிறுமியை நல்லொழுக்கத்துடன் வளர்த்தெடுப்பதே ஒவ்வொரு ஆசிரியரின் கடமையாகும். அதனை நம்பியே ஒவ்வொரு பிள்ளையையும் அவர்களது பெற்றோர் கல்வி பயில அனுப்புகின்றனர்.

நூற்றுக்கு 95 சதவீத ஆசிரியர்கள் நல்லொழுக்கமுள்ளவர்களாகம் மாணவர்களுக்கு போதனைகளை சொல்பவர்களாகவுமே சேவையாற்றுகின்றனர்.

அவர்களின் கடமையை நாம் போற்றவேண்டும். மீதமுள்ள 5 சதவீத ஆசிரியர்களை நாம் இனங்கண்டு அந்தப் பணியிலிருந்து அகற்றவேண்டிய கடப்பாடும் அனைவருக்கும் உண்டு.

இலங்கை குற்றவியல் சட்டத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறுமியை அவரது விருப்பத்துடனோ விரும்பமில்லாமலோ எந்தவொரு நபரும் தனது பாலியல் அவாவை நிறைவேற்ற முடியாது என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது வன்புணர்வு என்ற குற்றச்சாட்டுக்குள் அது அடங்கும்.

எனினும் பாலியல் ரீதியான துன்புறுத்தல் அல்லது முயற்சி குற்றவியல் சட்டத்தில் இடம்பிடிக்கைவில்லை என்றே குறிப்பிடலாம்.

அதற்காக அவ்வாறான கீழ்த்தரமான நடவடிக்கையில் ஈடுபடுவோரை காப்பாற்றும் வகையில் அல்லது அதனை சாதாரண விடயமாக எடுத்துக்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

குறிப்பாக ஆசிரியர்கள் இந்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவதை நியாயப்படுத்த முடியாது.

ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகளை நம்பிக்கையுடனேயே பாடசாலைக்கோ, தனியார் கல்வி நிலையத்துக்கோ அனுப்புகின்றனர். அந்த நம்பிக்கையை ஆசிரியர்கள் காப்பாற்றவேண்டும்.

வட்டுக்கோட்டை தனியார் கல்வி நிலைய ஆசிரியர் ஒருவர் கடந்த புதன்கிழமை (13) வட்டுகோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். தனியார் கல்வி நிலையத்தில் அவரிடம் கல்வி கற்ற மூன்று மாணவிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.