சிவகங்கையில்,திருமண நேரத்தில், மணவறையை விட்டுக் கிளம்பிய மணமகள்கள்….

சினிமாவில், கல்யாண சீன்களில், திடீரென்று கடைசி நேரத்தில், திருமணம் நின்று விடும். பெரும்பாலும், மணமகன் தான், இந்த திருமணத்தில் தனக்கு இஷ்டம் இல்லை என்று சொல்லி, எழுந்து செல்வான். அதனையும் மிஞ்சும் அளவிற்கு, சிவகங்கை மாவட்டத்தில் இரண்டு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

நேற்று, நல்ல முகூர்த்த நாள். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் உள்ள தியாகிகள் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில், சென்னை, தி.நகரில் வசிக்கும் 21 வயது பெண்ணிற்கும், வேந்தன்பட்டியைச் சேர்ந்த இளைஞருக்கும், திருமணம் நடைபெற இருந்தது. 3 மாதங்களுக்கு முன்பாகவே, இரண்டு வீட்டாரும், பத்திரிகை அடித்து, நண்பர்கள், உறவினர்கள் எல்லோருக்கும் கொடுத்து விட்டனர். திருமணத்திற்கு 5 நாட்களுக்கு முன்பாகவே, விருந்தும், சடங்குகளும் நடைபெற்று முடிவடைந்தன.

நேற்று காலை, கல்யாண மண்டபமே, கலகலப்பாக களை கட்டிக் கொண்டிருந்தது. காலை 10.30 மணிக்கு, மணவறைக்கு வந்த மணமகள், மாப்பி்ள்ளையைப் பிடிக்கவில்லை, என்று தடலாடியாகக் கூறி விட்டார். இதனால், இரண்டு வீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர். திருமணத்திற்கு வந்தவர்கள் எல்லாம், அமைதியாகத் திரும்பிச் சென்றனர்.

இதே போல், நேற்று சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், போலீஸ் லயன் தெருவில் உள்ள, திருமண மண்டபத்தில், சாப்ட்வேர் இன்ஜினியரான இளைஞர் ஒருவருக்கும், சாமநத்தம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கும், திருமணம் நடக்க இருந்தது. தாலி கட்டும் நேரத்தி்ல், மணப்பெண், கல்யாணம் வேண்டாம், என்று கூறி எழுந்து சென்று விட்டார். இதனால், கல்யாண மண்டபத்தில், பெரும் கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. பின், மணமகன், அந்த மண்டபத்திலேயே, தனது உறவுக்காரப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.