மல்லாகம் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்..சந்தேக நபர் பரீட்சை எழுத நீதிமன்றம் விசேட அனுமதி!!

குறித்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது 11 சந்தேகநபர்களும் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது முதலாம், நான்காம், ஏழாம் சந்தேகநபர்களின் சார்பில் சட்டத்தரணி கே.சுகாஸ் முன்னிலையானதுடன் 11 சந்தேகநபர்கள் சார்பிலும் சட்டத்தரணிகளான நன்னியன் தம்பிமுத்து, சோமசுந்தரம் தேவராஜா, ஆறுமுகம் ரகுபதி, நாகேந்திரன் பார்த்தீபன் ஆகியோரும் முன்னிலையாகியிருந்தனர். பொலிஸார் தரப்பில் காங்கேசன்துறைப் பொலிஸ் அத்தியட்சகரும் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

இதன் போது கைதுசெய்யப்பட்டுள்ள முதலாம், நான்காம், ஏழாம் சந்தேகநபர்களின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கே.சுகாஸ் துப்பாக்கிச் சூடு நடாத்திய பொலிஸ் உத்தியோகத்தர் தற்போது வெளியில் நிற்கும் நிலையில் இறந்தவருக்கு உதவி செய்தவர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையிலிருக்கிறார்கள். இந்த மூவரும் முன்னர் நீதிமன்றத்தில் எந்தவொரு வழக்குகளுடனும் சம்பந்தப்படாதவர்கள்.

அதிலும் ஜெயசீலன் என்பவர் நாளை(இன்று) கொழும்பில் இடம்பெறவுள்ள பொதுச்சுகாதாரப் பரிசோதகருக்கான பரீட்சை எழுதுவதற்குச் செல்ல வேண்டும். பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறையே இந்தப் பரீட்சை இடம்பெறுவதால், இந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிடுவது பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, அவரை மாத்திரமெனும் பிணையில் செல்ல அனுமதிக்குமாறு மன்றிடம் கேட்டுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து சட்டத்தரணி நன்னியன் தம்பிமுத்து 30 ஆம் இலக்க 1980 ஆம் ஆண்டு சட்டத்தின் 14 ஆம் பிரிவின் படி பிணை வழங்குவதற்கான உரிமை நீதிமன்றத்திற்குண்டு. சந்தேகநபர்கள் வழக்கு விசாரணைகளுக்கு ஆஜராகாது விடினும், சாட்சிகளுக்கு நெருக்கடி கொடுத்தாலும், மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்துபவர்களாயினும் பிணை வழங்க முடியாது. ஆனால், இந்த 11 பேரும் இவ்வாறான இந்தச் செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை. அவர்கள் எந்தவொரு குற்றங்களிலும் ஈடுபடவில்லை.

ஆகவே, நீதிமன்று தன்னுடைய தண்மதி அதிகாரத்தைப் பயன்படுத்தி 11 பேருக்கும் பிணை அனுமதி வழங்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். அத்துடன் ஏனைய சட்டத்தரணிகளும் குறித்த 11 பேருக்கும் பிணை அனுமதி வழங்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டனர்.

மன்றில் முன்னிலையாகிய சிரேஷ்ட சட்டத்தரணி சோமசுந்தரம் தேவராஜா கடந்த முப்பது வருட யுத்தத்திற்குப் பின்னர் கடந்த பத்து வருடகாலமாக ஒரு சுமுகமான சூழலை உருவாக்குவதற்காகப் பொலிஸார் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால், ஒரு சில பொலிஸாரின் தான்றோன்றித்தனமான, அடாவடித்தனமான செயற்பாடுகளால் பொலிஸ் திணைக்களத்திற்கே அவப்பெயர் ஏற்படும் போக்கும் காணப்படுகின்றது.

இதன்பின்னர் மன்றில் கருத்துரைத்த காங்கேசன்துறைப் பொலிஸ் அத்தியட்சகர் சுன்னாகம் பொலிஸார் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு மல்லாகம் நீதிமன்றத்தின் அனுமதியுடன் பிரேத பரிசோதனையொன்றுக்காகச் சென்ற போது மல்லாகம் சகாயா மாதா தேவாலயத்திற்கு முன்பாக இரு குழுக்களுக்கிடையே மோதல் இடம்பெற்றது.

இதன் போது மோதலில் இடம்பெற்ற தரப்பினரை நோக்கி மோதலில் ஈடுபட வேண்டாம் எனப் பொலிஸார் தெரிவித்த போதும் பொலிஸார் சென்ற வாகனம் தொடர்ந்தும் பயணிக்க முடியாதவாறு இடையூறு ஏற்படுத்தப்பட்டது. இதன் போது பொலிஸார் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையிலேயே துப்பாக்கிச் சூடு நடாத்த வேண்டியேற்பட்டது எனத் தெரிவித்தார்.

இந்த மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரைக் கைது செய்ய வேண்டியுள்ளது. ஆகவே, சந்தேகநபர்களைப் பிணையில் விடுவிப்பதற்கு ஆட்சேபணை வெளியிட்டார். எனினும், துப்பாக்கிச் சூடு நடாத்தி ஒருவரைக் கொலை செய்த சுன்னாகம் பொலிஸ் சார்ஜன்ட் இதுவரை ஏன் கைது செய்யப்படவில்லை என சிரேஷ்ட சட்டத்தரணி சோமசுந்தரம் தேவராஜா எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலெதுவும் வழங்கவில்லை.

இதனைத் தொடர்ந்து சட்டத்தரணி சுகாஸ் முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதவான் சந்தேகநபரான ஜெயசீலன் பொலிஸாரின் பாதுகாப்புடன் கொழும்பு சென்று பொதுச்சுகாதாரப் பரிசோதகருக்கான பரீட்சை எழுதுவதற்குத் தற்காலிகப் பிணை அனுமதி வழங்கினார்.

மேலும், கைது செய்யப்பட்டு மன்றில் முற்படுத்தப்பட்டுள்ள 11 பேரும் சந்தேகநபர்களே தவிர குற்றவாளிகளல்ல எனத் தெரிவித்ததுடன் தற்போது மல்லாகத்தில் பொதுமக்களுக்கும், பொலிஸாருக்குமிடையே ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவுவதன் காரணமாகப் பிணை அனுமதி வழங்க முடியாது எனவும் தெரிவித்தார்.இந்தச் சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து மன்று உரிய நடவடிக்கைகள் எடுக்கும் எனவும் தெரிவித்த அவர், எதிர்வரும் யூலை மாதம்-13 ஆம் திகதி வரை சந்தேகநபர்களின் விளக்கமறியலை நீடித்தும் உத்தரவிட்டார்.