விஜயகலா மகேஸ்வரன் தனது அமைச்சர் பதவியை இன்று இராஜினாமா

விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி தொடர்பாக, அமைச்சுப் பதவியிலிருந்து கொண்டு அவ்வாறான கருத்தை தெரிவித்திருப்பது பிழையாக இருந்தாலும், என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும் என்று இராஜாங்க அமைச்சர்தெரிவித்துள்ளார்.

விஜயகலாவின் கருத்து தெற்கில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி தற்போது பெரும் விவகாரமாக உருவெடுத்துள்ளது. இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நான் வெளியிட்ட புலிகள் விவகாரக் கருத்துத் தொடர்பில், எனது கட்சியின் தலைவருக்குத் தொலைபேசியில் தெரியப்படுத்தினேன். எனது நிலமை, கருத்துத் தொடர்பில் கட்சியின் தலைவர் புரிந்து கொண்டார். நான் ஏன் அப்படி கூறினேன் என்பதையும் அவர் விளங்கிக் கொண்டார்.
இந்தச் சர்ச்சைகள் மற்றும் விசாரணைகள் முடியும் வரை எனது இராஜாங்க அமைச்சு பொறுப்பிலிருந்து தற்காலிகமாக விலகுவதாக, எனது கட்சியின் தலைவரிடம் நான் தெரிவித்திருந்தேன். ஆனால் கட்சி வட்டாரங்களும், எனது கட்சியின் தலைவரும் அதை ஏற்க மறுத்து விட்டனர் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை விஜயகலா மகேஸ்வரன் தனது அமைச்சர் பதவியை இன்று இராஜினாமா செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன