ஏ.ஆர்.ரஹ்மான் பற்றித் தெரியாத விஷயங்கள்!

ஏ.ஆர்.ரஹ்மானின் வாழ்க்கைப் பாதையை விளக்கும் புத்தகம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது.

1992ஆம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி ஹாலிவுட் வரை சென்றார் ஏ.ஆர். ரஹ்மான். 2008ஆம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்திற்கு இசையமைத்தார். இதற்காக ஒரே மேடையில் இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்று இந்தியாவின் புகழை உலக அளவில் நிலைநாட்டினார்.

இவை தவிர, இசைத் துறையில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களுக்கு அளிக்கப்படும் கிராமி விருதினை இரு முறையும், பாஃப்டா மற்றும் கோல்டன் குளோப் விருதுகளை தலா ஒரு முறையும் பெற்றுள்ள ஏ.ஆர்.ரகுமான், ஆறு கவுரவ டாக்டர் பட்டங்களையும் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கடந்துவந்த வாழ்க்கைப் பாதையை விளக்கும் புத்தகம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. பென்குயின் பதிப்பகத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மானின் அதிகாரபூர்வ அனுமதியுடன் கிருஷ்ணா திரிலோக் என்பவர் எழுதியுள்ள இந்தப் புத்தகத்துக்கு நோட்ஸ் ஆஃப் எ டிரீம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் புத்தகத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் கடந்துவந்த பாதை மற்றும் அவரது வாழ்க்கை பதிவாகவுள்ளது. பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் டேனி பாய்லே எழுதியுள்ள அணிந்துரையுடன் இந்தப் புத்தகத்தை வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிட பென்குயின் பதிப்பகம் தீர்மானித்துள்ளது. அவர் எழுதியுள்ள அணிந்துரையின் சில வரிகளை பென்குயின் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

இந்தப் புத்தகம் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறும்போது “வாழ்க்கையை விட அதிகமாகவோ அல்லது அழகாகவோ கம்போசிஷன் இல்லை. வாழ்க்கை என்பது எங்கள் தேர்வுகளிலிருந்தும், நாம் கொடுக்கும் பாடல்களிலிருந்தும் பாடலை உருவாக்குகிறது. இத்தனை ஆண்டுகளில், நீங்கள் என் இசை மூலம் என்னை அறிந்திருக்கிறீர்கள். இப்போது நான் யார், நான் எங்கு செல்கிறேனோ அதைப் பற்றிப் படிப்பேன்” என்று கூறியுள்ளார்.

விளம்பரப் படத்துக்கு இசையமைத்தது முதல் ஆஸ்கர் விருது என்னும் மிகப் பெரிய சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றது வரை தனது இசையுலகப் பயணத்தில் ரஹ்மான் கடந்துவந்த பாதை மற்றும் அவரது தனிப்பட்ட குணாதிசயங்கள் இந்தப் புத்தகத்தில் பதிவாகியுள்ளன.