ரஞ்சன் எனக்கு செய்தது துரோகம் நான் மீண்டும் வருவேன்-விஜயகலா!

மீண்டும் எனது அரசியல் பயணம் தொடரும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,எனது கருத்துக்களை ஊடகங்களுக்கு வழங்கவேண்டிய தேவை ரஞ்சனுக்கு இல்லை. பிரச்சினைகள் முடிந்த பின் நான் இன்று ஊடகங்களிடம் நேரடியாக வந்துள்ளேன்.

ஊடகங்கள் ஊடாகவே எமது பிரச்சினையை வெளியில் கொண்டு வரமுடியும். அவர் கொண்டுவரத் தேவையில்லை.சக நாடாளுமன்ற உறுப்பினர் என்ற விதத்திலும், சிநேகித அடிப்படையிலும் தான் அவருடன் பேசினேன். ஆனால் அவர் தொலைபேசியில் அழைப்பை பேசி முடித்து வைக்கும் வரைக்கும் எனக்கு இவர் நேரடியாக ஊடகங்களின் ஊடாக இருந்து கொண்டு தொலைபேசியில் வைத்து கதைப்பது தெரியாது

அவர் அழைப்பை வைத்த பின் எனக்கு இந்த விடயம் தெரியவந்தது. பின்னர் நான் அந்த வீடியோ பதிவை பார்த்திருந்தேன் இது உண்மையிலேய எனது சிறப்புரிமையை மீறல்.

இவர் ஒரு பெண்ணுக்கு துரோகம் செய்திருக்கின்றார். அதுவும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு எப்படி துரோகம் செய்திருக்கின்றார் என்பதையே இந்த உலகம் அறிந்திருக்கின்றது.இது என்னுடைய சிறப்புரிமை மீறல் மற்றும் கணவரை இழந்து தனியாக வாழும் என்னுடைய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகவும் இது இருக்கின்றது.

விடுதலைப்புலிகள் எனது கணவரை கொலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எனது கணவரை விடுதலைப்புலிகள் கொலை செய்திருக்குமாயின், அப்போதைய பாதுகாப்பு அமைச்சருக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் தொடர்பு இருந்திருக்க வேண்டும். அவ்வாறு தொடர்பு இருந்ததா?

ஹிட்லருடன் பிரபாகரரை ஒப்பிட முடியாது. பிரபாகரன் ஹிட்லர் போன்று மோசமானவர் அல்ல. பிரபாகரன் மண்ணுக்காக போராடியவர்.

என்னுடைய பதவியை நானே விரும்பி தற்காலிகமாக இராஜினாமா செய்துள்ளேன். ஆனால் எனது நாடாளுமன்ற உறுப்புரிமையை அவர்களால் இரத்துச்செய்ய முடியாது.

நான் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றுக்கு வரவில்லை. மக்களால் தெரிவுசெய்யப்பட்டு வந்துள்ளேன். ஆகவே என்னை நாடாளுமன்ற பதவியிலிருந்து நீக்க முடியாது. விசாரணைகள் இடம்பெறுகின்றன.

பதவியை இராஜினாமா செய்வதற்கு பதிலாக நான் மன்னிப்பு கோர வேண்டும் என்று திலங்க சுமதிபால தெரிவித்திருக்கின்றார்.

ஆனால் நான் ஏன் மன்னிப்பு கோர வேண்டும். நான் என்ன தவறு செய்தேன். நான் எனது மக்களுக்காக எனது பதவியை தியாகம் செய்துள்ளேன். எனது மக்களுக்காக எனது உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருக்கின்றேன்.” என்றும் விஜயகலா ஆதங்கமாக பதிலளித்துள்ளார்.