ஹிட்லருடன் எங்கள் தலைவர் பிரபாகரனை இணைக்க முடியாது! மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விஜயகலா எம்.பி

அண்மையில் பிரபாகரன் குறித்து தென்னிலங்கையில் எழுந்துள்ள சர்ச்சை நிலை குறித்து, ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் விஜயகலா கருத்து வெளியிட்டார். இதன்போது கருத்து வெளியிட்ட விஜயகலா,

“எனது மக்களுக்காக சேவை செய்ய வேண்டிய கடமை எனக்கு உள்ளது. மக்களினால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராக அப்படி செய்ய முடியாமல் போனால் நான் நாடாளுமன்ற உறுப்பினர் வரப்பிரசாதங்களை மீற வேண்டிய நிலை ஏற்படும். எனது மனதில் உள்ள வேதனையை கூற எனக்கு உரிமை உள்ளது. ஊடகங்கள் ஊடாக தான் அந்த பிரச்சினை வெளியே வருகின்றது.

எனினும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஊடகத்திற்கு முன்னால் இந்தப் பிரச்சினையை கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை. இந்த விடயம் தொடர்பில் நட்புறவுடனேயே நான் தொலைபேசி அழைப்பிற்கு பதிலளித்தேன். எனினும் ரஞ்சன் ஸ்பீக்கரில் போட்டு ஊடகத்திற்கு முன்னால் வெளிப்படுத்தினார் என்று அதுவரை எனக்கு தெரியாது.

இது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு உள்ள உரிமை மீறலாகும். அவர் எனக்கு துரோகம் செய்து விட்டார். பெண் இனத்திற்கு துரோகம் செய்துவிட்டார். ஹிட்லருடன் எங்கள் தலைவர் பிரபாகரனை இணைக்க முடியாது. அவர் அந்தளவு கொடூரமானவர் இல்லை. நீங்கள் விரும்புகின்றீர்களோ இல்லையோ அவர் எம் இனத்திற்காக போராடினார் என்பதனை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். அவர் இருந்த காலத்தில் எங்களுக்காக போராடிய தலைவராகும்.

அவர் வரலாற்றை எதிர்வரும் பரம்பரை ஆய்வு செய்யும். தெற்கில் ஹிட்லர் ஆட்சியே இடம்பெறுகின்றது. வடக்கில் எம்மை வாக்குகளுக்காக மாத்திரமே வைத்துள்ளனர். எனினும் ஹிட்லரையும் பிரபாகரனையும் தராசில் வைக்க முடியாது. அவர் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்றே போரிட்டார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பலாலியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதும் பிரபாரகன் குறித்து விஜயகலா மகேஸ்வரன் கருத்து வெளியிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,

“இன்று தெற்கில் இனவாதமான கருத்துக்களை அதிகமாக பேசுகின்றார்கள் என்பது உங்களுக்கு தெரியும். யாழ்ப்பாண மாவட்டத்தில் எங்கள் மக்களுக்கு உள்ள பிரச்சினை என்ன என்பதனை வெளிப்படுத்த முயற்சித்தால், நம்மை விடுதலை புலிகள் என முத்திரையிடுகின்றார்கள். அந்த கருத்தில் இருந்து நாம் நீங்க வேண்டும்.

நாம் யாழ்ப்பாணத்தையும், மொனராகலையையும் எடுத்து கொண்டால், அங்கு யுத்தம் ஒன்று இருக்கவில்லை. நாம் இங்கு பிரச்சினையை சமர்ப்பிக்க சென்றால் இனவாத அரசியல்வாதி என அடையாளப்படுத்துகின்றார்கள். எங்கள் மக்களுக்காக எனது அமைச்சு பதவியையும் கைவிட்டேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.