திண்டுக்கல்லில், சொத்துக்காக பெற்ற தாய்க்கு இறப்பு சான்றிதழ் வாங்கிய கொடூர மகன்!

திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் மருதாயம்மாள் (வயது 81). இவரது கணவர் இறந்து 55 வருடங்கள் ஆகி விட்டன. இவருக்கு, வெள்ளைச்சாமி என்ற மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். அனைவரும் திருமணம் ஆகி செட்டில் ஆகி விட்டனர். மருதாயம்மாளின் கணவர் கணவர் இறந்து விட்டதால், அவர் பெயரில் உள்ள 1 ஏக்கர் 75 சென்ட் நிலம், மருதாயம்மாள் பெயரில் தான் பட்டாவுடன் இருந்தது.

வயதான காலத்தில், தன் தாயைப் பேணிக் காக்க வேண்டிய மகன், தன் தாய் பெயரில் இருந்த சொத்தை விற்பதற்காக, யாருக்கும் தெரியாமல், தன் தாய் இறந்து விட்டதாகப் போலி சான்றிதழ் பெற்று, அந்த நிலத்தை தன் பெயருக்கு மாற்றி, விற்று விட்டார். இதற்கு, அவரது மகன் ஜெகனும் உடந்தையாக இருந்துள்ளார். சிறிது நாளில், தன் நிலத்தை, தனக்குத் தெரியாமல், தன் மகன் விற்ற விபரம் தெரிய வர, இந்த விவகாரத்தை விசாரித்து, தனது சொத்தை மீட்டுத் தர வேண்டும், என்று மருதாயம்மாள், திண்டுக்கல் எஸ்.பி. சக்திவேலிடம் புகார் அளித்துள்ளார்.

மேலும், அந்த சொத்தில் உரிமை கொண்ட, தன் இரண்டு மகள்கள் பெயரும் இல்லாமல் இருப்பதையும், பொறுப்புள்ள தாயாகச் சுட்டிக் காட்டி உள்ளார். அந்தப் புகார் மனுவின் மீதான விசாரணை நடைபெற்ற போது, மருதாயம்மாள் மகன், போலியாக, இறப்புச் சான்றிதழ் பெற்றது தெரிய வந்தது. இது குறித்து, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.